தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், தரமான படங்களைத் தருபவர் என்று ரசிகர்கள் விமர்சகர்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான இயக்குநர் பாண்டிராஜ் இன்று (ஜூன் 7) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
2009இல் வெளியான 'பசங்க' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உலகுக்குள் பிரவேசிக்க வைத்ததோடு அனைவரையும் தமது பள்ளிக்கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற வகையில் முதல் படத்திலேயே ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்துக்குச் சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த வசனம் என இரண்டு பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது. இந்திய சினிமா வரலாற்றில் அறிமுகப் படத்துக்கே ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய விருதுகளை வென்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியாக தேசிய அளவில் அரிதினும் அரிதான சாதனையை நிகழ்த்தியிருப்பவர் பாண்டிராஜ். சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் கோல்டன் எலிஃபண்ட் சிறந்த இயக்குநர் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த வசனங்களுக்கான விருது என சர்வதேச, தேசிய, மாநில அங்கீகாரங்களை வாரிக்குவித்த படம் 'பசங்க'. இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அதிக மக்களால் பார்க்கப்படுவதாக உள்ளது.
அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளில் 9 திரைப்படங்களை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். 'பசங்க' படத்தில் நடிகர் விமலை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார். கிராமியக் கதையான 'வம்சம்' என்னும் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தில் அருள்நிதியை நாயகனாக அறிமுகப்படுத்தினார். நகர்ப்புற இளைஞர்களின் கனவுகள் குறித்த கதையான 'மெரினா'வில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மிமிக்ரி-நகைச்சுவை கலைஞராகவும் புகழ்பெற்ற, தொலைக்காட்சிகளின் வழியே மக்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயனைக் கதாநாயகனாக நடிக்க வைத்தார்.
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் விமல். சிவகார்த்திகேயன் இருவரையும் வைத்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நாயகப் படமாக உருவாக்கியிருந்தார். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது இருவருக்குமே மிக முக்கியமான திருப்புமுனையைக் கொடுத்தது. இப்படியாக தன்னுடைய முதல் நான்கு படங்களில் மூன்று இளம் கதாநாயகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தார் பாண்டிராஜ். இவர்களில் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கிறார். அருள்நிதி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயக நடிகர் என்னும் மதிப்புக்குரிய நற்பெயரைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார். விமல் தொடர்ந்து பல வகையான படங்களில் நாயகனாக நடித்துவருகிறார்.
பாண்டிராஜ் இயக்கிய மற்ற படங்கள் அனைத்தும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்களைக் கொண்டிருந்தன. சூர்யா தயாரிப்பில் 'பசங்க 2' படத்தை இயக்கினார். அதில் சூர்யா சற்றே நீண்ட கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் நகர்ப்புற குழந்தைகள் சார்ந்த முக்கியமான உளவியல் பிரச்சினையை முதிர்ச்சியுடன் பேசியது.
அடுத்ததாக 'இது நம்ம ஆளு' என்னும் காதல் படத்தில் சிலம்பரசனையும் நயன்தாராவையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்க வைத்தார். விஷாலை வைத்து 'கதகளி' என்னும் பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லரை இயக்கினார். கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்னும் திரைப்படத்தின் மூலம் அக்கா-தம்பி, மாமன் – மருமகள், அப்பா-மகன் உள்ளிட்ட ரத்த உறவுகளின் பாசத்தின் மேன்மையையும் விவசாயத்தின் மகத்துவத்தையும் உணர்த்தி ரசிகர்களை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்தார். சூர்யாவின் தயாரிப்பான அந்தப் படம் அவருடைய 2டி நிறுவனம், பாண்டிராஜ் மற்றும் கார்த்தி ஆகியோரின் திரைவாழ்வில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'நம்மவீட்டுப் பிள்ளை' படத்தின் மூலம், அண்ணன் – தங்கை பாசத்தைப் பல வளர்ச்சிகளைக் கண்டுவிட்ட நவீன காலத்தில் வேகமாக நகரும் உலகத்திலும், குடும்ப உறவுகளுக்கிடையிலான அன்பும், பாசமும், அக்கறையும் மகத்துவம் இழக்கவில்லை என்பதை அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படமும் வணிகரீதியாக வெற்றி பெற்றது.
குழந்தைகள் உலகம், நகைச்சுவை, காதல், ஆக்ஷன், த்ரில்லர், சென்டிமென்ட், கிராமத்துக் கதை, நகரத்துக் கதை எனப் பல வகைமைகளில் தரமான திரைப்படங்களைக் கொடுத்திருப்பவர் பாண்டிராஜ். அறிமுக நடிகர் என்றாலும் நட்சத்திர நடிகர் என்றாலும் யாருடன் பணியாற்றினாலும் தன்னுடைய படைப்பு முத்திரையிலும் தனித்தன்மையிலும் சமரசம் செய்துகொள்ளாத இயக்குநர்.
விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா' திரைப்படத்துக்குத் தரமான வசனங்கள் எழுதினார். தன்னுடைய முன்னாள் துணை இயக்குநரான நவீன் இயக்கிய 'மூடர் கூடம்' திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார். இப்படி இயக்குநராக மட்டுமல்லாமல் தரமான திரைப்படங்களுடன் தன்னை வேறு வகைகளிலும் தொடர்புப்படுத்திக் கொள்வதையும் அவை பரவலான மக்களைச் சென்றடைய உதவுவதிலும் பெறும் பங்களிப்புகளைச் செய்துவருகிறார் பாண்டிராஜ்.
இன்றைய முதல் நிலை நட்சத்திரக் கதாநாயகர்களில் ஒருவரான சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். இது நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் எனப் பல வழிகளில் ரசிகர்களுக்குத் தரமான திரைப்படங்கள் கிடைக்கக் காரணமாக இருந்துள்ள பாண்டிராஜ் இன்னும் பல ஆண்டுகள் வெற்றிப் படங்களைக் கொடுத்துக்கொண்டும் விருதுகளை வென்றுகொண்டும் ஆரோக்கியத்துடன் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
38 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago