என் புகழை அதிகம் பரப்பியதே எஸ்பிபிதான்: இளையராஜா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

தனது புகழை, இசையின் பெருமையை அதிகம் பரப்பியதே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் என்று இளையராஜா பேசியுள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (ஜூன் 4) எஸ்பிபியின் 75-வது பிறந்த நாள். இதை முன்னிட்டு அவரது மகன் எஸ்.பி.சரண், திரைத்துறையில் பல இசைக் கலைஞர்கள், நண்பர்களைப் பேசவும், பாடவும் வைத்துக் காணொலி ஒன்றைத் தயார் செய்துள்ளார். இதில் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், சங்கர் மகாதேவன், சித்ரா, யுகேந்திரன் எனப் பலரும் பேசியுள்ளனர்.

எஸ்பிபியின் இள வயதிலிருந்து அவருடைய நெருங்கிய நண்பரான இளையராஜாவும் இதில் பேசியுள்ளார்.

"பாலுவைப் பற்றிச் சொல்லுவதாக இருந்தால், நிறைய உள்ளன. நாங்கள் சிறு வயதிலிருந்து மிக நெருக்கமான நண்பர்கள். வாடா போடா என்று பேசிக்கொள்வோம். பாலா என்று நான் அவரை அழைப்பேன். தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் அவ்வளவு நெருக்கமான நண்பர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

பாலு இறந்துபோவார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர் மருத்துவமனையில் இருக்கும்போது, பாலு எழுந்து வா என்று நான் பேசிய வீடியோவைப் பார்த்து, போனை வாங்கி முத்தம் கொடுத்து உணர்ச்சிவசப்பட்டார்.

யாரையாவது சந்திக்க வேண்டுமா என்று அப்போது சரண் கேட்டதற்கு, ராஜாவை மட்டும் சந்திக்க வேண்டும் என்று பாலு சொன்னார். ஆனால், அந்த விஷயம் என்னிடம் வரவே இல்லை. எனக்குச் சொல்லப்படவே இல்லை. அப்போது மருத்துவக் காரணங்களுக்காகப் பார்வையாளர்கள் யாரும் அவரிடம் நெருங்கக் கூடாது என்று சரணிடம் சொல்லியிருந்தார்களோ, என்னவோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் செய்தி எனக்கு வந்து சேரவில்லை என்பது பின்னால் தெரிந்து நான் வேதனைப்பட்டேன்.

ஒரு வேளை தெரிந்திருந்தாலும், கரோனா பரவலை மனதில் வைத்துப் போகாமல் இருந்திருக்கலாம். மேலும், அதுதான் அவரது கடைசிக் கட்டம் என்று அப்போது தெரியாது. அவர் மறைந்த பிறகு, கடைசியில் இரண்டு வார்த்தை அவரிடம் பேச முடியவில்லையே என்று வருந்தினேன்.

தொழில்ரீதியாக அவருடன் பணியாற்றியதில் எனக்கு நிறைய சந்தோஷம். மிகவும் கடினமான பாடல்களையெல்லாம் நான் அவரோடு சண்டை போட்டு பாட வைத்திருக்கிறேன். அவரும் என்னுடன் சண்டை போட்டுப் பாடியிருக்கிறார்.

என்னுடைய புகழை அதிகமாகப் பரப்பியதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான். ஒவ்வொரு கச்சேரியிலும் குறைந்தது ஐந்து முறையாவது என்னைப் பற்றி உயர்வாகப் பேசாமல் அவர் இருந்ததில்லை. என்னைப் பற்றித் தவறாகப் பேசியதே இல்லை.

என் இசையில் இருக்கும் நுணுக்கங்களை நான் கூட மேடையில் சொன்னது கிடையாது. அதையெல்லாம் எடுத்துப் பல மேடைகளில் விலாவரியாக விவரித்துப் பேசியிருக்கிறார். எனது இசையின் பெருமையை ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேச எனக்கு மனசு வராது. ஆனால், அவர் பல முறை பேசியிருக்கிறார். பெரிதும் பாராட்டியிருக்கிறார்.

நான் பிரபலமானவன் என்பதால் என்னைப் பற்றிப் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று அவர் பேசுகிறார் என்றெல்லாம் ஒரு காலத்தில் நினைத்திருந்தேன். ஆனால், அப்படியெல்லாம் கிடையாது. இசை மீது அவருக்கிருந்த ஈடுபாடு, என் இசையை அவர் புரிந்துகொண்ட விதம், இதனால்தான் அவர் அப்படிப் பேசுகிறார் என்பது, அவர் பேசிய சில வீடியோக்களைப் பார்க்கும்போது எனக்குப் புரிந்தது.

‘சங்கீத ஜாதி முல்லை’ பாடலை நாங்கள் 4 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட 8 மணி நேரம் அவர் அதற்காகப் பயிற்சி செய்தார். பாடிக்கொண்டே இருந்தார். நான் சில முறை போதும் என்றாலும், இல்லை, இந்த இடம் இன்னும் சிறப்பாகப் பாடலாம் என்று அவர் பாடலை மெருகேற்றினார். எங்களுக்குள் அப்படியான உறவு. நான் வேண்டாம் என்றாலும் பாடுவேன் என்பார். இந்த நட்பு வேறெந்தப் பாடகரோடும் எனக்கு இருந்ததில்லை

ஜி.கே.வெங்கடேஷிடம் நான் உதவியாளராக இருந்தபோது திரைப்படங்களின் பின்னணி இசைக்கு வாசிப்பேன். எப்படியும் 3 நாட்கள் அந்த வேலை போகும், 600 ரூபாய் கிடைக்கும். என் குடும்பம், என் சகோதரர்கள், பாரதிராஜா என அனைவருக்கும் அந்தப் பணம் செலவாகும் என்பதால் அந்த நேரத்தில் பணத் தேவை அதிகமாக இருந்தது.

பாலுவின் கச்சேரியில் வாசித்தால் 100 ரூபாய் கிடைக்கும். 600 ரூபாயை விட்டு அங்கு போவதா என்று யோசிப்பேன். பாலு, ஜிகேவியிடம் நேரடியாகப் பேசி என்னை அனுப்பி வைக்கச் சொல்லுவார். அவரும் சென்று வா என்பார். நானும் பணம் போகிறதே என்று தயக்கத்துடன் செல்வேன். இப்படியான அனுபவங்களையெல்லாம் கடந்துதான் நாங்கள் வந்தோம். தொடர்ந்து நண்பர்களாக இருந்தோம்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். ஆனால், உண்மையான நட்பு என்பது என்றைக்கும் மாறாதது. அது உள்ளுக்குள் ஓடி உயிரோடு கலந்த விஷயம். பாலுவின் புகழ் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கு இறைவன் அருள் செய்வான் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களையெல்லாம் நேரில் சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். பாலுவின் புகழ் வாழ்க".

இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்