கணிக்க முடியாத கிருமி கரோனா: கங்கணா பகிர்வு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றைக் கணிக்கவே முடியாது, நன்றாக ஓய்வெடுப்பதே தேறுவதற்கு சிறந்த வழி என்று நடிகை கங்கணா ரணாவத் பேசியுள்ளார்.

தனக்கு கோவிட் தொற்று உறுதியானது குறித்து கடந்த மாதம் நடிகை கங்கணா ரணாவத் பகிர்ந்தார். மேலும் இது வெறும் காய்ச்சல்தான், அதிக ஊடக வெளிச்சம் விழுந்து பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது என்று அவர் தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு உண்மைக்குப் புறம்பானது என்பதால், இன்ஸ்டாகிராம் தளத்தால் நீக்கப்பட்டது.

கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த அனுபவம் குறித்துக் காணொலி ஒன்றை கங்கணா தற்போது வெளியிட்டுள்ளார்.

"கோவிட்-19 என்பது நான் முன்னரே சொன்னதைப் போல ஜலதோஷம் போன்ற ஒரு பிரச்சினைதான். ஆனால், கோவிட்டுக்கு எதிராகப் போராடித் தேறி வரும்போது எனக்குப் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் நடந்தன. இதுவரை நான் அனுபவத்திடாத விஷயங்கள். வழக்கமாக உடல் நலம் குன்றி அடுத்து நன்றாகத் தேறுவோம். ஆனால், கரோனா விஷயத்தில் தேறி வருகிறோம் என்று தவறாகத் தோன்ற ஆரம்பித்தது.

தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்த ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகே, உடற்பயிற்சி, நண்பர்களுடன் பேசுவது, படப்பிடிப்புக்குச் செல்வது என எல்லா வேலைகளையும் முன்னால் செய்ததைப் போலச் செய்ய முடியும் என்கிற உணர்வே வந்தது. ஆனால், இதையெல்லாம் செய்ய வெளியே காலடி எடுத்த வைத்ததும், மீண்டும் நோய் வந்ததைப் போல உணர்ந்தேன். உடல்நிலை சரியாக இல்லை. மீண்டும் படுக்கையில் விழுந்தேன்.

சில சமயங்களில் என்னால் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியாதது போலத் தோன்றியது. மீண்டும் என் தொண்டை மோசமானது, ஜுரம் வந்தது. இந்தக் கிருமி கணிக்கமுடியாத வகையில் உள்ளது. இது மரபணு மாற்றப்பட்ட கிருமி என்பதால் இது நம் உடலைத் தாக்கும்போது நம் உடலால் அதை எப்படி எதிர்ப்பது என்று தெரியவில்லை. நமது இயற்கையான எதிர்ப்பு சக்தியை முடக்குகிறது. இதனால்தான் பலரும் உயிரிழக்கின்றனர்.

எனவே, முழுமையாகத் தேறுவது மிக முக்கியம். இந்தக் கிருமியுடன் போராடும்போது பல மருத்துவர்களிடம் நான் பேசினேன். அதில் நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், தேறி வரும் காலகட்டத்தில் ஓய்வெடுப்பதை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதே. எனவே தொடர்ந்து ஒய்வெடுத்து நன்றாகத் தேறி வாருங்கள்" என்று கங்கணா பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE