தணிக்கை விதிகளால் சீன மொழி ரீமேக்கில் மாறிய 'த்ரிஷ்யம்' இறுதிக் காட்சி

'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் சீன மொழி ரீமேக்கில் இறுதிக் காட்சி மாற்றப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் திடீர் விவாதம் நடந்து வருகிறது.

மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விறுவிறு திரைக்கதையும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது. இதைத் தவிர சீன மொழியிலும் இந்தப் படம் அதிகாரபூர்வமாக ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டாலும் தற்போது இந்தப் படத்தின் இறுதிக் காட்சி மாறியது குறித்து சமூக வலைதளங்களில் சினிமா ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

அசல் 'த்ரிஷயம்' கதையின் முடிவில், நாயகனும் அவரது குடும்பமும் செய்த குற்றத்திலிருந்து தப்பிப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மேலும் நாயகன், காவல் நிலையக் கட்டிடத்தின் கீழ் சடலத்தை மறைத்து வைத்திருப்பதும் தெரியவரும். புத்திசாலித்தனமான திரைக்கதையோடு சேர்ந்து இந்த இறுதிக் காட்சிகள்தான் இந்தப் படத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், சீன மொழி ரீமேக்கில், இறுதியில், நாயகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், சமூகத்துக்கு இணக்கமான வகையில்தான் திரைப்படங்கள் இருக்க வேண்டும், குற்றவாளிகள் தப்பிப்பதைப் போல கதைகள் இருக்கக் கூடாது என்று அந்நாட்டின் தணிக்கையில் எழுதப்படாத விதி இருப்பதே. மேலும் குற்றச் செயல்களைப் பற்றிய படங்களில் குற்றங்களைக் காட்டக் கூடாது, பேய்ப் படங்களில் பேய் இருக்கக் கூடாது, ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைக் காட்டக்கூடாது எனப் பல நிபந்தனைகள் இந்தத் தணிக்கையில் உள்ளன.

அதனால்தான் சீன ரீமேக்கின் இயக்குநர் இந்தக் கதை தெற்காசியப் பகுதியில் சாய் என்கிற கற்பனை ஊரில் நடப்பதாக அமைத்திருந்தார். மேலும், நாயகனின் குடும்பத்தை வஞ்சிக்கும் காவல்துறையினர் யாரும் சீனர்களாக சித்தரிக்கப்படவில்லை.

மோசமான காவல் அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும்போது அவர்களைத் தோற்கடிக்கவும் வழிகள் உள்ளன என்பதையே ‘த்ரிஷ்யம்’ காட்டியது. ஆனால், அதன் சீன ரீமேக், நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கொலை செய்தாலும் நீங்கள் குற்றவாளிதான் என்று சொல்கிறது என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். பலர் இந்தப் புதிய முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து சீன திரைப்படத் தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், படத்தின் இயக்குநர் சாம் குவா, கலை ரீதியாக மட்டுமே முடிவு மாற்றப்பட்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE