கார்த்திக் ஆர்யனுக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம்: அனுபவ் சின்ஹா ட்வீட்

By செய்திப்பிரிவு

நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு எதிராக பாலிவுட்டில் திட்டமிட்டு பிரச்சாரம் நடப்பதாக இயக்குநர் அனுபவ் சின்ஹா ட்வீட் செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, தொழில்முறையாகச் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதால் ’தோஸ்தானா 2’ திரைப்படத்திலிருந்து கார்த்திக் ஆர்யனைத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் நீக்கினார். இதுகுறித்து நீண்ட அறிக்கை வெளியிட்டதோடு, இனி தனது நிறுவனம் எந்த விதத்திலும் கார்த்திக் ஆர்யனை ஒப்பந்தம் செய்யாது என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஷாரூக் கானின், ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த, இயக்குநர் அஜய் பல்லின் படமான ’குட்பை ஃப்ரெட்டீ’யிலிருந்து கார்த்திக் ஆர்யன் விலக்கப்பட்டார் என்ற செய்தி வந்தது. ஆனால் 'தோஸ்தானா 2'வைப் போல இதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவரும் தயாரிப்புத் தரப்பும் சுமுகமாகப் பேசிய பின்னரே விலகுவது பற்றிய முடிவை எடுத்திருந்தது பின்னர் தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு, ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில் நடிக்கவிருந்த 'கேங்ஸ்டர்' திரைப்படத்திலிருந்தும் கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. ஆனால் , இவை வெறும் புரளிகள் என்று ஆனந்த் எல்.ராயின் நிறுவனம் அதிகாரபூர்வமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டது.

தற்போது, கார்த்திக் ஆர்யனைப் பற்றியே தொடர்ந்து செய்திகள் வருவது, அவருக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் என்று இயக்குநர் அனுபவ சின்ஹா கூறியுள்ளார்.

"தயாரிப்பாளர்கள் நடிகர்களை நீக்கினாலோ, தயாரிப்பாளர்கள் மாறினாலோ அதைப் பற்றி வெளியே பேசிக்கொள்ள மாட்டார்கள். இது அடிக்கடி நடப்பதுதான். கார்த்திக் ஆர்யனுக்கு எதிரான பிரச்சாரம் திட்டமிட்டது, நியாயமற்றதாக எனக்குத் தெரிகிறது. இதற்கு பதில் சொல்லாமல் அவர் அமைதி காப்பதை நான் மதிக்கிறேன்" என்று சின்ஹா ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கெனவே, சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு எதிராகச் செயல்பட்டதைப் போல, இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது பாலிவுட் கூட்டமும் கார்த்திக் ஆர்யனுக்கு எதிராகச் செயல்படுவதாக நடிகை கங்கணா ரணவத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE