இந்தியாவில் முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் அலுவலகம்: நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தனது முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் அலுவலகத்தை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாகத் திகழ்வது நெட்ஃப்ளிக்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுவதும் 20 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். அதேபோல உலகின் விலையுயர்ந்த ஓடிடி தளமும் இதுவாகும். கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் ‘சாக்ரெட் கேம்ஸ்’, ‘டெல்லி க்ரைம்’, ‘லூடோ’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் இந்த ஆண்டுக்கான 41 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் இந்தியாவில் தனது முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் அலுவலகத்தை அடுத்த ஆண்டு மும்பையில் தொடங்கவுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''இயக்குநர்கள், எடிட்டர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய சிறப்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலையும், 40 எடிட்டிங் அறைகளையும் கொண்ட ஒரு போஸ்ட் புரொடக்‌ஷன் அலுவலகத்தை மும்பையில் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த கதைகளைச் சொல்வதற்கான மூலதனங்களுடன் படைப்பாளர்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவதால் இது இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையில் எங்களை மேலும் வலுப்படுத்தும்.

போஸ்ட் புரொடக்‌ஷன், கதை எழுதுதல் மற்றும் இன்ன பிற அம்சங்களில் சான்றிதழ்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டில் நாங்கள் முதலீடு செய்கிறோம். இதன் மூலம் இந்திய படைப்பு சமூகத்திற்குத் தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE