இளையராஜா 78: திரையிசையில் 7/8 தாளத்தின் முன்னோடி!

By வா.ரவிக்குமார்

இசைஞானி இளையராஜா பிறந்த நாள் - ஜூன் 2, 1943.

கர்னாடக இசையில் 176 தாளத்தை நம்முடைய இசை முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு தாளத்திற்கும் உரிய கணக்கு வழக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தத் திரையிசையிலுமே விரல்விட்டு எண்ணும் அளவுக்குதான் தாளங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இதில் தகதிமி தகதிமி (4/4), தகிட (3/4), தகிடதகிட (6/8), தக தகிட (5/8) இந்த தாளகதியிலேயே திரைப் பாடல்களைப் பெரும்பாலும் இசையமைத்திருப்பார்கள்.

இதில் தகிட தகதிமி (7/8) என்னும் தாளகதியில் இசையமைத்து அதன் இனிமையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் இசைஞானி இளையராஜாவுக்குப் பெரும் பங்கு உண்டு. காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம், அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற பக்தி இலக்கியங்களில் இந்தத் தாளங்களில் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

பொதுவாக அதிக வார்த்தைகள் அமைந்த வரிகளுக்கும் வர்ணனை மிகுந்த பரதநாட்டிய பதங்களுக்கும் மிஸ்ர நடை என்று அழைக்கப்படும் இந்த (7/8) தாளகதியைப் பயன்படுத்தி இருக்கின்றனர் நம்முடைய முன்னோர்கள்.

'நிறம் மாறாத பூக்கள்' திரைப்படத்தில் 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' என்னும் பாடலில் முதன் முறையாக இந்தத் தாளத்தை இளையராஜா பயன்படுத்தியிருப்பார். மலேசியா வாசுதேவன், ஜென்ஸி, எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடியிருக்கும் இந்தப் பாடலில் பல சம்பவங்கள் சங்கமமாகும். 'மலைகள் மீது ரதி உலாவும் நேரமே..' போன்ற அலாதியான வரிகள் இந்த தாளகதியில் அடங்கியிருக்கும் அழகே இந்தப் பாடலை இன்றுவரை உயிர்ப்பாக வைத்திருக்கிறது எனலாம்.

'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் தொடக்கப் பாடலாக இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் 'பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டாலே புத்தி சொன்னார் / பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்தப் பாட்டுகள் பலவிதம்தான்' பாடல் ஒலிப்பது இந்த தாளகதியில்தான். ஊன்றிக் கவனித்தால் ஒரு கதை சொல்லியின் தொனி அந்தப் பாடலில் வெளிப்படும். ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரிக்க வழி இருக்கும். ஒரு வார்த்தையை உச்சரிக்கும் கால அளவை நீட்டிக்கவும் இதில் வழி இருக்கும்.

காதலாகிக் கசிந்துருகும் பாடல்களுக்கும் இளையராஜா இந்த தாளகதியில் இசையமைத்திருக்கிறார். அதில் என்றென்றைக்கும் நம் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது 'சிப்பிக்குள் முத்து' திரைப்படத்தில் ஒலிக்கும் 'மனசு மயங்கும் மௌனகீதம்'. காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தை இருவரும் உரையாடுவது போன்ற பாணியில் பாடப்பட்டிருக்கும் பாடல். எஸ்.பி.பி. மற்றும் கே.எஸ்.சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் அமைந்திருப்பதும் இந்த தாளத்தில்தான். 'இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு சுகங்கள் இருமடங்கு..' என்று வார்த்தை விளக்குகள் நின்று நிதானமாக பளிச்சென்று துலக்கமாகப் பாடலில் ஒளிர்ந்திருக்கும்.

இசைக் கலைஞர்களுக்கு நுட்பங்களை சிலாகித்துப் பேசுவதற்கு உதவும் அதே இசை, கேட்கும் ரசிகனையும் மிக எளிதாக அந்த இசையை உருவாக்க வைக்கும். 'அட.. இவ்வளவுதானா… நம்மாலும் முடிகிறதே…' என்று பாடுவதில் ஆர்வம் இருப்பவரைப் பாடகராக்கும். வாத்தியங்கள் வாசிப்பதில் ஆர்வம் இருப்பவர்களை மேசை, நாற்காலி, புத்தகம் என்று கிடைக்கும் பொருட்களில் எல்லாம் அந்தத் தாளத்தை வாசிக்கவைத்து அவருக்குள் சுடர்விடும் கலையைத் தீபமாக்கும். அதுதான் ஒரு சாமான்ய ரசிகனையும் படைப்பாளியாக, கலைஞனாக மாற்றும் இளையராஜாவின் இசை மேதைமை.

இப்படிப்பட்ட ஒரு தாளக்கட்டில் அமைந்த இன்னொரு பாடல், 'இதயம்' திரைப்படத்தில் இளையராஜாவே பாடியிருக்கும் 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா'. காதலைக் காதலியிடம் சொல்லாமல் தவிக்கும் காதலனின் ஊமைக் காதலின் வலியை ஒட்டுமொத்தமாக இறக்கி வைத்திருப்பார்கள் இந்தப் பாடலில்.

'யாப்போடு சேராதோ பாட்டு தமிழ்ப் பாட்டு

தோப்போடு சேராதோ காத்து குளிர் காத்து..

வினாத்தாள் போல் இங்கே கனா காணும் காளை

விடை போலே அங்கே நடைபோடும் பாவை'

என விலாவாரியாக காதலின் வலி மிகுந்த வாழ்க்கை அந்தப் பாடலில் பதிவாகியிருக்கும். எளிமையான இசை, தாளத்தில் ஒலித்தாலும் இதயத்தில் நேராகச் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும் வகையில் அந்தப் பாடலின் இசையும் தாளகதியும் அமைந்திருக்கும்.

திரையிசையில் அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் இருந்த அந்த மிஸ்ர நடை தாளகதி, அதன்பின் பல இசையமைப்பாளர்களால் பல பாடல்களில் கையாளப்பட்டன.

'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' அப்படி முகிழ்ந்த ஒரு பாடல்தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE