மணிரத்னம் பிறந்த நாள் ஸ்பெஷல்: தலைமுறைகளைக் கடந்து கொண்டாடப்படும் இயக்குநர் 

By ச.கோபாலகிருஷ்ணன்

இந்திய சினிமாவின் தலைசிறந்த திரைப் படைப்பாளிகளில் ஒருவரான மணிரத்னம் இன்று (ஜூன் 2) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த குடும்பத்தில் பிறந்தவர் மணிரத்னம். எம்பிஏ பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றிவந்தார். சிறு வயதில் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் வளரிளம் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் எனும் உந்துதலையும் அளித்தன. திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருந்தபோது மகேந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோரின் திரைப்படங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.

முதல் படத்தில் முதல் விருது

தான் எழுதிய முதல் திரைக்கதையைத் தானே இயக்குவது அல்லது தன்னைக் கவர்ந்த மூன்று இயக்குநர்களில் ஒருவரிடம் கொடுத்து இயக்கவைப்பது என்று தீர்மானித்தார். ஆனால் மூவருமே அதற்குச் சம்மதிக்கவில்லை. இந்தச் சூழலில் அந்தக் கதையைக் கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்தார் மணிரத்னத்தின் உறவினர். இப்படித்தான் 1983இல் வெளியான 'பல்லவி அனுபல்லவி' திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மணிரத்னம்.

யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் இயக்குநர் ஆகியிருந்தாலும் அவருடைய முதல் படத்தில் இளையராஜா (இசை), பாலு மகேந்திரா (ஒளிப்பதிவு), பீ.லெனின் (படத்தொகுப்பு) ஆகியோர் பணியாற்ற முன்வந்தனர். அனில் கபூர், லட்சுமி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'பல்லவி அனுபல்லவி' வணிக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை வென்றார் மணிரத்னம். திரைப்படங்களைப் பார்த்தும் புத்தகங்களைப் படித்தும் திரைத்துறையில் சாதிக்கும் கனவுகளுடன் இருந்த நண்பர்களுடன் விவாதித்தும் எழுதப்பட்ட திரைக்கதைக்கு விருது கிடைத்தது தமிழ் சினிமாவில் ஒரு அரிதான சாதனைப் படைப்பாளியின் வருகையை அறிவிப்பதாக அமைந்தது.

உயிர்பெற்றுவரும் பிரம்மாண்டக் கனவு

இன்றும் இந்திய சினிமாவின் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளியாகத் திகழ்கிறார் மணிரத்னம்.தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய புதிய திரைப்படங்கள் தொடர்பான அறிவிப்பு ஒவ்வொன்றும் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. தற்போது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் வரிசையை வைத்து அவர் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 65 வயதை அடைந்திருக்கும் நிலையில் தன் நெடுநாள் கனவுப் படைப்பை அதுவும் மிகப் பெரிய பொருட்செலவும் பிரம்மாண்டமான உழைப்பையும் நேர்த்தியையும் கோரும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். அவருக்குள் இருக்கும் படைப்பு மனம் துளியும் சோர்வடையவில்லை என்பதற்கு இதைவிட வலுவான ஆதாரம் இருந்த விட முடியாது.

உருவாக்கத்தில் ஒரு முன்னோடி

மணிரத்னத்தின் நெடிய திரைவாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்துள்ளன. ஆனால் தோல்விப் படங்களிலும் மணிரத்னத்தின் படைப்பு முத்திரை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிந்திருக்கும். உள்ளடக்கத்துக்கு இணையாக உருவாக்கமும் முக்கியமானது என்பதில் தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மணிரத்னம். அவருடைய திரைப்படங்களின் மூலம் திரைப்படமாக்கம் என்னும் கலை குறித்தும் ஒளி அமைப்பு, ஒலிப் பயன்பாடு, நிறங்களின் முக்கியத்துவம் எனச் சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் தமிழ்த் திரையுலகுக்கு வழிகாட்டியானார் மணிரத்னம். தனக்கென்று ஒரு பிரத்யேகத் திரைமொழியை உருவாக்கி அது இன்றுவரை நீர்த்துப்போகாமல் தக்கவைத்திருக்கிறார்.

காலம் கடந்து ரசிக்கப்படும் படைப்புகள்

கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களை நிறைவுசெய்யவிருக்கும் மணிரத்னம் திரைவாழ்வில் தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்த்துக் கொண்டேயிருக்கும் காலத்தால் அழிக்க முடியாத பல படைப்புகள் வந்துள்ளன. 'மெளன ராகம்', 'நாயகன்', 'தளபதி', 'அக்னி நட்சத்திரம்', 'அஞ்சலி’, 'ரோஜா', 'பம்பாய்', 'இருவர்', 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஓ காதல் கண்மணி' என அந்தப் பட்டியல் நீள்கிறது.

அவருடைய பிரம்மாண்டப் படைப்புகளில் ஒன்றான 'இருவர்' படுதோல்வி அடைந்தது. ஆனால், அது வெளியாகி ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைக் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கூகுளிலோ யூடியூபிலோ தேடுதளத்தில் இருவர் என்று தட்டச்சு செய்தால் அந்தப் படத்தின் சிறப்புகளை, நுட்பங்களை விளக்கும் ஆழமான செறிவான கட்டுரைகளும் காணொலிகளும் கிடைக்கும். அதேபோல் அவருடைய பல படங்களில் விவரிக்கத் தவறிய சிறப்புகளும் நுட்பங்களும் தற்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடந்து ரசிக்கப்படுவதும் ரசிகர்கள் ஆழ்ந்து தேடிக் கண்டடைய வைக்கும் நுட்பங்கள் பொதிந்த படைப்புகளை உருவாக்குவதுமே ஒரு கலைப் படைப்பாளியின் உயரத்தைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் இந்தியத் திரைவானில் மணிரத்னம் மிகப் பெரிய உயரத்தில் நிற்கிறார்.

பாலிவுட்டைக் கவர்ந்தவர்

தமிழிலேயே இயங்கினாலும் சில நேரடி இந்திப் படங்களையும் தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்திப் படங்களையும் கொடுத்ததன் மூலம் பாலிவுட்டிலும் பெரும் மதிப்பைப் பெற்ற படைப்பாளியாக இருக்கிறார் மணிரத்னம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி திரையுலகிலும் இயக்குநர்கள், கலைஞர்கள் பலர் அவரை தன்னுடைய மானசீக குருவாகப் போற்றுகின்றனர். ரசிகர் பரப்பிலும் இத்தனை ஆண்டுகளில் அவருடைய மதிப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது. 80ஸ் கிட்ஸ், 90ஸ், கிட்ஸ், 2கே கிட்ஸ் எனத் தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் அவருடைய திரைப்படங்களின் வெளியீட்டு நாளன்று திரையரங்க இருக்கைகளை நிறைக்கிறார்கள். உண்மையில் அவருடைய பழைய திரைப்படங்களைத் தேடிப் பார்த்து இன்னும் இன்னும் பரவசம் அடைகிறார்கள்.

இரண்டு பாகங்களாக உருவாகப் போகும் 'பொன்னியின் செல்வன்' மணிரத்னத்தின் கனவுப் படம் என்றாலும் அவருக்கு இன்னும் பல கனவுகள் இருக்கும். பெரும் படைப்பாளிகள் தம் படைப்புகளுக்குக் கிடைக்கும் வெற்றிக்காகவும் அங்கீகாரங்களுக்காகவும் அல்லாமல் படைப்புப் பணி அளிக்கும் மகிழ்ச்சிக்காகவே அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.

மணிரத்னத்தின் தணியாத கலைத் தாகமும் வற்றாத நீரூற்றான அவருடைய படைப்பாளுமையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே உற்சாகத்துடனும் அர்ப்பணிப்போடும் அவரை இயங்க வைக்கும். ரசிகர்கள் அவருடைய திரைப்படங்களைக் காணக் காத்திருப்பார்கள். அவரை ஆதர்சமாகக் கருதும் ரசிகர்களும் படைப்பாளிகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE