’ஜகமே தந்திரம்’ முழு கதைச் சுருக்கம்: ட்ரெய்லருடன் வெளியீடு

By செய்திப்பிரிவு

'ஜகமே தந்திரம்' படத்தின் கதைக்களத்தை, ட்ரெய்லர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 18-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று (ஜூன் 1) வெளியிட்டுள்ளது படக்குழு.

'ஜகமே தந்திரம்' படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ட்ரெய்லர் பக்கத்தில் படத்தின் கதைக்களத்தையும் வெளியிட்டுள்ளது.

அதில் 'ஜகமே தந்திரம்' படத்தின் கதையாகக் கூறப்பட்டு இருப்பதாவது:

"மதுரையைச் சேர்ந்த, எந்தக் கவலையும் இல்லாத ரவுடி சுருளி. லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ் மற்றும் அவனது கூட்டத்தில் ஊடுருவ, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, லண்டனில் அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்திருக்கும் பெரிய தாதா பீட்டர் என்பவனால் சுருளி வேலைக்கு எடுக்கப்படுகிறான். மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில், அவர்கள் வீடு என்று நினைக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே இந்தப் படம்".

இவ்வாறு 'ஜகமே தந்திரம்' ட்ரெய்லர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE