சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகள் நிறைவு: சோனு சூட் நெகிழ்ச்சி

சினிமாவில் 19 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து சோனு சூட் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவினார். இது தவிர வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்தார்.

அதேபோல அவரது உதவிகள் இந்த ஆண்டும் தொடர்கின்றன. சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றுடன் (31.05.2021) சோனு சூட் சினிமாவுக்கு வந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

சினிமாவில் 19 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:

''என் வாழ்க்கையில் சரியான கதாபாத்திரத்தைக் கண்டுபிடிக்க எனக்கு 19 ஆண்டுகள் ஆகியுள்ளன. அதில்தான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுள்தான் இந்த உண்மையான திரைப்படத்தின் இயக்குநர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதை இன்றுவரை எனது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பிய உண்மையான பாத்திரத்தோடு என்னை இணைத்த கடவுளுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய முதல் படமான ‘ஷஹீத்- இ- அஸாம்’ வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? என்னுடைய பையில் ஏராளமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மும்பை நகருக்குள் நுழைந்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கியது பெரும் போராட்டமாக இருந்தது. இப்போதும் அப்போராட்டம் தொடர்வதாக உணர்கிறேன்''.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE