மீண்டும் படப்பிடிப்பு தொடங்க அனுமதி: மகாராஷ்டிர முதல்வருக்கு திரைப்படத் தொழிலாளர்கள் வேண்டுகோள்

படப்பிடிப்புப் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதிக்குமாறு மேற்கிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கரோனா 2-வது அலை இந்தியாவைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 50 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,27,510 ஆகக் குறைந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் திரைத்துறையும் கடும் இழப்பைச் சந்தித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மேற்கிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து மேற்கிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாகப் பல்வேறு கோரிக்கைகள் உங்களிடம் வைக்கப்பட்டன. எனினும், நாங்கள் அனுப்பிய எந்தவொரு கடிதத்திற்கும் உங்களுடைய அலுவலகத்திலிருந்து பதில் அனுப்பப்படவில்லை. எங்கள் கோரிக்கைகள் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

லட்சக்கணக்கான கலைஞர்கள், தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கிறார்கள். திரைத்துறை மட்டுமே அவர்களது வருமானத்திற்கான மூலதனமாக இருந்து வருகிறது. இத்துறை லட்சக்கணக்கான மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உணவளித்து வருகிறது. இருப்பினும் இந்த ஊரடங்கு அந்த மக்களின் அன்றாட வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பது, தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு. தொழிலாளர்கள் மட்டுமின்றி திரைப்படங்களில் பெரும் முதலீடுகளைச் செய்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, திரைத்துறையின் பணிகளை மீண்டும் தொடங்க சிறப்பு அனுமதி தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் இந்தக் கடினமான காலகட்டத்தில் பிழைக்க முடியும். அரசு வெளியிடும் கட்டுப்பாடுகளைத் திரைத்துறை கண்டிப்புடன் பின்பற்றும் என்று உறுதியளிக்கிறோம்''.

இவ்வாறு அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE