இதுவும் கடந்து போகும்; பொறுப்புணர்வுடன் இருப்போம்: சல்மான் கான் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

அனைவரும் நேர்மறை எண்ணங்களுடனும், பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று நடிகர் சல்மான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தபாங்’. இப்படத்தில் சல்மான் கான் நடித்த சுல்புல் பாண்டே கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார்.

தற்போது இப்படம் அனிமேஷன் வடிவில் தொடராக வெளியாகவுள்ளது. இரண்டு சீசன்களாக உருவாகவுள்ள இதில் ஒவ்வொரு சீசனிலும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 52 எபிசோட்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது ஆன்லைனில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்காகப் பல்வேறு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து சல்மான் கான் கூறியுள்ளதாவது:

''இந்த மோசமான காலகட்டம் கடக்கும் வரை அனைவரும் நேர்மறை எண்ணங்களுடனும், பொறுப்புணர்வுடனும் இருப்போம். இதுவும் கடந்து போகும். நாம் அனைவரும் ஒரு கடினமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நான் அறிவேன். நாம் நம்பிக்கையுடன் ஒருவருக்கு ஒருவர் இயன்றவகையில் உதவியாக இருக்க வேண்டும்.

என்னுடைய ‘தபாங்’ படத்தைத் தழுவி ‘தபாங்’ அனிமேஷன் தொடர் வெளியாகவுள்ளது. இது போலீஸ் அதிகாரி சுல்புல் பாண்டேவின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாகசங்களைப் பற்றிப் பேசுகிறது. துரதிர்ஷ்டவசமாக இத்தொடரில் வரும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு நான் குரல் கொடுக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் ஏமாற்றமடையாத வகையில் டப்பிங் கலைஞர்கள் அற்புதமான முறையில் பணியாற்றியுள்ளனர்''.

இவ்வாறு சல்மான் கான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE