ஒரு கிராமத்துக்கான தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ்பாபு

ஒரு கிராமம் முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான செலவை நடிகர் மகேஷ் பாபு ஏற்றுக்கொண்டுள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழகம், கேரளத்திலும் இவருக்கும், இவரது திரைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. பல்வேறு நல உதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் மகேஷ் பாபு, ஹீல் எ சைல்ட் என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து இதுவரை 1000 குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், முறையே புர்ரேபாலெம், சித்தாபுரம் ஆகிய கிராமங்களை மகேஷ் பாபு தத்தெடுத்துள்ளார். அவருடைய 'ஸ்ரீமந்துடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அந்தக் கதை ஏற்படுத்திய தாக்கத்தால்தான் இந்த கிராமங்களை தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமங்களின் முக்கிய இடங்களைப் புனரமைத்துள்ளார்.

தற்போது இந்தியாவில் கரோனா 2-வது அலை குறையத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்களும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

மகேஷ் பாபு தனது தந்தையும், ஆந்திரத் திரையுலகின் மூத்த நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புர்ரேபாலெம் கிராமத்தினர் அனைவருக்கும் தனது சொந்தச் செலவில் இலவசத் தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தத் தடுப்பூசி போடும் பணிகள் இன்று (மே 31) காலை தொடங்கப்பட்டன. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதற்குப் பலரும் மகேஷ் பாபுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர மருத்துவமனைகள் சிலவற்றோடு இணைந்து இந்தப் பணியை மகேஷ் பாபு முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE