மாயாவதியைப் பற்றி ஆபாசக் கருத்து: நடிகர் ரன்தீப் ஹூடாவின் தூதர் பதவிப் பறிப்பு

By ஏஎன்ஐ

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியைப் பற்றி ஆபாசமாகப் பேசிய நடிகர் ரன்தீப் ஹூடாவின் தூதர் பதவியைப் புலம்பெயர் காட்டு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு பறித்துள்ளது.

புதன்கிழமை அன்று ஹூடா பேசிய பழைய காணொலி ஒன்று திடீரென்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதில் அவர் நகைச்சுவை என்று பேசிய விஷயம் சாதி மற்றும் பாலியல் ரீதியிலான வெறுப்பைக் காட்டுவதாகப் பலர் கண்டித்தனர். பலரும் அவர் மாயாவதியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் புலம்பெயர் காட்டு விலங்குகள் பாதுகாப்புக்கான அமைப்பில் தூதராக இருந்த ஹூடா உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"2012ஆம் ஆண்டு எங்களின் தூதர் ரன்தீப் ஹூடா பேசிய காணொலி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசிய கருத்துகள் அவதூறாகவும், எங்கள் அமைப்பின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வண்ணம் உள்ளது. ஹூடா, இனி இந்த அமைப்பின் தூதராகச் செயல்பட மாட்டார்.

இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின் கீழ் மட்டுமே வருகிறது. சபையின் செயலகத்துக்கும், அதன் சுற்றுச்சூழல் திட்டத்துக்கும் இதில் தொடர்பில்லை. ஹூடா, தூதராக இருந்ததும் எங்கள் அமைப்பு மட்டுமே" என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE