நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே: டி.சிவா உருக்கம்

By செய்திப்பிரிவு

நட்பும், தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே என்று வெங்கட் மறைவு குறித்து டி.சிவா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சீரியல்கள், படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் வெங்கட் சிவா. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர், இன்று (மே 29) சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவருடைய மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வெங்கட் சுபாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் தயாரிப்பாளர் டி.சிவா.

தனது நண்பன் மறைவு குறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியிருப்பதாவது:

"வெங்கட்.. வெங்கட்.. வெங்கட்... என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள், ஆயிரமாயிரம் நினைவுகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லிக் கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான்.

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜானுபாகுவாக, ஆரோக்கியமாக இருந்த உன்னைக் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளைத் திட்டங்களைக் கனவுகளையும் அழித்துவிட்டது.

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு. ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றிச் சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களைச் சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கரோனாவுக்கு என் உடன் பிறந்த சகோதரனைப் பறிகொடுத்தேன் இன்று. உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறிகொடுத்துவிட்டேன்.

வெங்கட், மறக்க முடியாதுடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட். இந்த கரோனாவை எதிர்த்து உன்னைக் காப்பாற்ற உன் மனைவியும் உறவுகளும் நண்பர்களும் நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்குத் தொடர்புகொண்டு போராடியது. ஆனாலும், உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட். கரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட். தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாறு. உன்னை தினம் தொட்டு வணங்கிக் கொள்கிறேன்".

இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE