என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது: சிரஞ்சீவி கோரிக்கை

By செய்திப்பிரிவு

என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரா, தெலங்கானாவில் எப்போதுமே கொண்டாடப்படும் தலைவர் என்.டி.ராமாராவ். நடிகராக இருந்து பின்பு தெலுங்கு தேசம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களம் கண்டார். 1983-ம் ஆண்டு இவருடைய கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல்வராகப் பொறுப்பேற்றார் என்.டி.ராமாராவ். அதனைத் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார்.

1996-ம் ஆண்டு என்.டி.ராமாராவ் காலமானார். தெலுங்கு மக்கள் இப்போதும் என்.டி.ராமாராவைக் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று என்.டி.ராமாராவின் 98-வது பிறந்த நாளாகும். இதனால் பலரும் என்.டி.ராமாராவ் தொடர்பாக ட்வீட் செய்து வருகிறார்கள். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எங்களுடைய தெலுங்கு தேசம், நாட்டின் பெருமைமிகு தலைவர் நந்தமுரி தரக ராமாராவுக்கு பாரத ரத்னா வழங்குவது தெலுங்கு மக்களுக்குப் பெருமை. அசாமியப் பாடகரும், இசைக் கலைஞருமான பூபேன் ஹசரிகாவிற்கு எப்படி மரணத்திற்குப் பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதுபோல ராமாராவுக்கு விருது வழங்கப்பட வேண்டும்.

இந்த கவுரவத்தை என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டால், அது தெலுங்கு மக்களுக்கு வழங்கப்படும் கவுரவமாக இருக்கும். அந்த மிகச்சிறந்த மனிதரின் 98-வது பிறந்த நாளில் இதை நினைவு கூர்கிறேன்”.

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE