தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம்: நட்டி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம் என்று ட்விட்டர் பயனர்களுக்கு நட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னணி ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நட்ராஜ். இவரைத் திரையுலகில் நட்டி என்று அழைத்து வருகிறார்கள். இவருடைய நடிப்புக்குப் பாராட்டுகள் குவிந்து வருவதால், ஒளிப்பதிவு வாய்ப்பை விட நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் வருகின்றன.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'கர்ணன்'. அதில் வில்லத்தனம் மிகுந்த காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் நட்டி. அதற்கு பாரதிராஜா தொடங்கி பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

எப்போதுமே ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் நட்டி. அவ்வப்போது சர்ச்சைக்குரிய ட்வீட்கள் மூலமாக சிக்கலுக்கும் ஆளாகிவிடுவார். தற்போது பாராட்டுகள் குவிந்துவரும் வேளையில், தன்னை ட்விட்டர் தளத்தில் பின்தொடர்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் நட்டி கூறியிருப்பதாவது:

"ஒரு படத்தில் நடிக்கிறோம். அதை விமர்சிக்கப் பலருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஒரிஜினல் ஐடியில் வாருங்கள். போலியான ஐடியில் வராதீர்கள். யாரென்றே புரிந்துகொள்ள முடியவில்லை. அதிகப்படியான கருத்துகளை வேறு பதிவு செய்கிறீர்கள். தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாமே”.

இவ்வாறு நட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE