எங்களுக்குள் நடந்த அபத்தமான விவாதம்: யுவன் மனைவி பகிர்வு

By செய்திப்பிரிவு

யுவனுடன் நடந்த அபத்தமான விவாதம் குறித்து அவரது மனைவி பகிர்ந்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

யுவனின் மனைவி பெரிதாக எந்தவொரு திரையுலக நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக இயங்கி வந்தார். யுவன் குறித்து பெரிதாகப் பேட்டியும் அளித்ததில்லை.

இந்நிலையில், முதன் முறையாக யுவன் குறித்து பேட்டியொன்றை அளித்துள்ளார். 12 கேள்விகள் கொண்ட அந்தப் பேட்டி 'U1 Records’ யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் யுவன் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும்:

உங்களுக்குச் சொந்தமான எது தற்போது யுவனுக்குச் சொந்தமாக மாறியுள்ளது?

என் குடும்பம். விளையாட்டாக ஏதாவது வாதிடும் போது கூட என் குடும்பத்தினர் அவர் பக்கமே நிற்பார்கள். அவர்கள் வீட்டு மகனைப் போல அவரிடம் அவ்வளவு இயல்பாக இருப்பார்கள். என் குடும்பம் அவரது குடும்பம் போல இப்போது மாறிவிட்டது.

யுவனின் மனைவியாக இருப்பதில் சிறந்த விஷயம் என்ன, மோசமானது என்ன?

யுவனின் மனைவியாக இருப்பதால் எனக்கு நன்றாகப் பாடத் தெரியும், இசையைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. உண்மை இதற்கு நேரதிரானது. எனவே இதுதான் மோசமான விஷயம்.

சிறந்த விஷயம் இசை தான். ஏனென்றால் அவர் உருவாக்கும் இசையை மற்றவர்கள் கேட்கும் முன்னால் நான் முதலில் கேட்டு அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது.

உங்களுக்குள் நடந்த அபத்தமான விவாதம் என்ன?

எங்கள் இருவரின் பேச்சு வழக்கும் வித்தியாசமானது. எங்கள் மகள் ஸியாவுக்கு என்ன தமிழைச் சொல்லித் தர வேண்டும் என்று வாதிடுவோம். நான் ராமேஸ்வரத்துக்கு அருகில் கீழக்கரையைச் சேர்ந்தவள். எங்கள் தமிழ் வித்தியாசமாக, இலங்கைத் தமிழின் தாக்கத்தோடு இருக்கும். தினசரி பேசும் வார்த்தைகள் முற்றிலும் வித்தியாசமான தனித்துவமானதாக இருக்கும். எனது பேச்சுவழக்கு நாட்டுப்புறம் என்று அவர் சொல்வார். நான் அவருடைய பேச்சுவழக்கை அப்படிச் சொல்வேன். இதுதான் வழக்கமாக எங்களுக்குள் விவாதம். இதில் முக்கியமான விஷயம் என்றால் எங்கள் பேச்சு வழக்குகளை என் மாமனார் கிண்டல் செய்வது நகைச்சுவையாக இருக்கும்.

உங்களை அதிகம் எரிச்சலூட்டுவது எது?

தோற்றத்தை மட்டும் வைத்து ஒரு விஷயத்தைப் பற்றித் தீர்மானிப்பது. இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் பார்க்கும் ஜன்னல், நாம் தான். இந்தப் பழமொழி எனக்குப் பிடிக்கும். நமது ஜன்னல் அழுக்காக இருந்தால் நாம் பார்க்கும் உலகமும் அழுக்காகத் தான் இருக்கும் என்பது தான் என் எண்ணம். இன்னொரு விஷயம் பாரபட்சம்.

மற்றவர்களை முன் தீர்மானத்தோடு அணுகுவது. மற்றவர்களின் வாழ்க்கையில் போராட்டமோ, பிரச்சினையோ இல்லை என்று பேசுவது. என் பெயர் ஸஃப்ரூன் நிஸார். உருது, இந்தி போன்ற மொழிகளை நான் பேசுவேன் என்று எனது பெயரை வைத்து மக்கள் நினைப்பார்கள். உண்மை என்னவென்றால் நான் ஒரு தமிழச்சி. தமிழ் என் தாய் மொழி. அப்படி நினைப்பதில் தப்பில்லை. ஒரு உதாரணத்துக்காகச் சொல்கிறேன்.ம்

உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?

இளையராஜா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE