பிரபாஸ் - நாக் அஸ்வின் படத்தின் சுவாரசியப் பின்னணி

By செய்திப்பிரிவு

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்' மற்றும் 'சலார்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'ராதே ஷ்யாம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதர படங்களின் படப்பிடிப்பு சில தினங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்பு நடைபெறவில்லை.

'ஆதிபுருஷ்' மற்றும் 'சலார்' படங்களுக்கு முன்னதாக, 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்தப் படத்தில் அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், முதற்கட்ட பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

இதில் பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். இதனால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பது போன்று வடிவமைத்துள்ளாராம் நாக் அஸ்வின். 2050-ம் ஆண்டு நடப்பது போன்று வடிவமைத்து வைத்துள்ளாராம். அந்தக் காலத்தில் இந்த உலகத்தில் என்னவெல்லாம் மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்றெல்லாம் சிந்தித்து கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க உள்ளார்களாம்.

பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

விரைவில் ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE