நட்சத்திர அந்தஸ்தின் தன்மை வேகமாக மாறி வருகிறது: தமன்னா

By செய்திப்பிரிவு

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சியால் நட்சத்திர அந்தஸ்தின் தன்மை வேகமாக மாறி வருகிறது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. தற்போது ‘நவம்பர் ஸ்டோரி’ மூலம் தமிழ் வெப் சீரிஸ் தளத்திலும் கால்பதித்துள்ளார். ஆனால் சினிமாவா, ஓடிடியா இரண்டில் எது என்பதைத் தேர்வு செய்யும் பிரச்சினை தனக்கில்லை என்கிறார் தமன்னா.

"தேர்வு செய்ய ஒன்றுமில்லை. ஏனென்றால் என் கைவசம் இரண்டும் உள்ளன. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் ஒருவர் பெற்ற ரசிகர் கூட்டத்தை இன்றைய தலைமுறை நடிகர்கள் பெறுவது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தற்போது நிலவும் தொற்று நெருக்கடியில், ஒரு திரைப்படத்தைச் சுற்றியுள்ள உணர்வுகள் மாறியுள்ளன.

இனி திரைப்படங்களைப் பார்க்கும் விதமே மாறும். எனவே நட்சத்திர அந்தஸ்தின் தன்மையே வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபருக்காக மட்டும் யாரும் ஒரு படைப்பைப் பார்க்க விரும்புவதில்லை. அதன் தரத்துக்காகப் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் பெற முடிந்தது என் அதிர்ஷ்டமே.

'நவம்பர் ஸ்டோரி' பற்றிப் பேச வேண்டுமென்றால் இதற்கு முன் நான் ஒரு க்ரைம் த்ரில்லரில் நடிக்கவில்லை. எனவே, அந்தக் களமே எனக்குப் புதிது. மகள் - அப்பா உறவின் தன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த அனுபவம் உதவியது. மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது" என்று தமன்னா பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE