8.45 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்கிய அமேசான்

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனத்தை, அமேசான் நிறுவனம் 8.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் வாங்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இரு தரப்புமே இதுகுறித்து உறுதி செய்யாத நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாலிவுட்டில் நீண்ட பாரம்பரியம் கொண்ட தயாரிப்பு நிறுவனம் எம்ஜிஎம். கிட்டத்தட்ட 4,000 திரைப்படங்களையும், 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துத் தன் வசம் வைத்துள்ளது. இது அமேசானின் ஸ்டுடியோஸ், திரைப்படம், ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது.

எம்ஜிஎம்மின் படைப்புகளை அவர்களது அணியுடன் சேர்ந்து தொடர்ந்து மேம்படுத்தவும், -புத்துயிர் கொடுக்கவும் தயாராக இருப்பதாக ப்ரைம் வீடியோ மற்றும் அமேசான் ஸ்டுடியோஸின் துணைத் தலைவர் மைக் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார்.

'ஜேம்ஸ் பாண்ட்' திரை வரிசை, 'ராக்கி', 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்', 'ரோபோ காப்' உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்கள் எம்ஜிஎம் தயாரித்தவையே. மேலும் 'ஃபார்கோ', 'ஹான்ட் மெய்ட்ஸ் டேல்', 'வைகிங்ஸ்' உள்ளிட்ட வெப் சீரிஸையும் தயாரித்துள்ளது. இவை அனைத்தும் அமேசான் வசம் சேர்ந்திருப்பதால் ப்ரைம் ஸ்ட்ரீமிங் தளத்தில் இருக்கும் படைப்புகளின் எண்ணிக்கை இனி கணிசமாக உயரும். இதனால் ப்ரைமுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE