தைவானை நாடு என்று அழைத்த ஜான் ஸீனா: சீன ரசிகர்கள் ஆவேசம்

By செய்திப்பிரிவு

தைவானை நாடு என்று அழைத்ததால் நடிகர் ஜான் ஸீனாவைக் கண்டித்து சீன ரசிகர்களும், ஊடகங்களும் செய்தி வெளியிட, தற்போது ஜான் ஸீனா தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய ஜான் ஸீனா, படத்தைக் காணும் முதல் நாடுகளில் ஒன்றாகத் தைவான் இருக்கும் என்று பேசியிருந்தார். ஆனால், இது பெரும் சர்ச்சையானது.

தீவு நாடான தைவானை நீண்டகாலமாக சீனா, தனது நாட்டின் பரப்பாக உரிமை கோரி வருகிறது. மேலும், என்றோ ஒரு நாள் போர் செய்தாவது அதைக் கைப்பற்றியாக வேண்டும் என்பது சீனாவின் நோக்கம். அதைத் தனி நாடாக அடையாளப்படுத்தும், அங்கீகரிக்கும் எந்த ஒரு செயலையும் சீனா எதிர்த்து வருகிறது.

இது தெரியாத ஜான் ஸீனா, தைவானை நாடு என்று அழைத்தது சீனத்து மக்களைக் கோபப்படுத்தியுள்ளது. எதிர்ப்பு அதிகரிப்பதை உணர்ந்த ஸீனா, தற்போது மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் மாண்டரின் மொழியிலேயே பேசியிருக்கும் ஸீனா, "நான் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படத்துக்காகப் பல பேட்டிகள் கொடுத்தேன். அதில் ஒரு பேட்டியில் தவறு செய்துவிட்டேன். ஒரு முக்கியமான விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும். நான் சீனாவையும், சீனத்து மக்களையும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். எனது தவறுக்கு நான் மிக மிக அதிகமாக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த மன்னிப்பு போதாது, தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று பேசி காணொலி வெளியிட வேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனர்.

கடந்த வார இறுதியில் சீனாவில் வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படம் 148 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE