'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: மொழி வாரியாகத் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகள் யாருக்கு?

By செய்திப்பிரிவு

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் யார் யாருக்கு என்பதைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பென் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது. அந்நிறுவனத்திடமிருந்து ஒவ்வொரு மொழி உரிமையையும் தனித்தனியாகக் கைப்பற்ற, கடும் போட்டி நிலவியது.

இறுதியாகப் பல்வேறு உரிமைகளை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்துக் கைப்பற்றியது. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை. இன்று (மே 26) படக்குழுவினரே எந்த மொழியின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை யார் யாருக்கு என்பதை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியின் டிஜிட்டல் உரிமைகளை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தி மொழியின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ஆங்கிலம், கொரியன், ஸ்பானீஷ், டர்க்கீஷ், போர்ச்சுகீஷ் ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

தொலைக்காட்சி உரிமைகளில் இந்தி உரிமையை ஜீ சினிமாவும், தெலுங்கு, தமிழ், கன்னட உரிமையை ஸ்டார் குரூப் நிறுவனமும், மலையாள உரிமையை ஏசியா நெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்தியாவில் தயாரான சினிமாக்களில் எந்தவொரு படமும் இந்த அளவு விலைக்கு விற்பனையானதில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE