'புதுப்பேட்டை' வெளியாகி 15 ஆண்டுகள்: வன்முறையால் உயரம் தொட்டு வீழ்ந்த மனிதனின் கதை 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் தாதாக்கள், ரெளடிகளைக் கொடூரமான வில்லன்களாகவும், அப்பழுக்கற்ற நாயகர்களாகவும், வில்லத்தனம் மிக்க நாயகர்களாகவும் கடைசியில் தவறுகளை உணர்ந்து 'திருந்து'கிறவர்களாகவும் சித்தரித்த பல்வேறு வகையிலான திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் 2006 மே 26 அன்று வெளியான 'புதுப்பேட்டை' திரைப்படத்தை இவற்றில் எந்த வகைமைக்குள்ளும் அடக்கிவிட முடியாது.

நன்மை, தீமை என்ற பொதுவான மதிப்பீடுகளுக்கு அஞ்சாமல் தாதாக்கள் உருவாகும் விதத்தையும், அவர்களின் செயல்பாடுகளையும், அவற்றின் விளைவுகளையும், தாதாக்களை இயக்கும் அரசியலையும், அரசியலின் தாதாக்களின் தாக்கத்தையும் எந்த ஒரு மனச்சாய்வும் இன்றி யதார்த்தத்துக்கு நிகராக அதேநேரம் ஆவணத் தன்மை அடைந்துவிடாத அபாரமான கலை நேர்த்தியுடன் படைத்திருப்பார் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கிய மூன்றாவது திரைப்படம் இது. 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' இரண்டும் காதல் படங்கள் என்றாலும் அவற்றில் சமூகக் கட்டமைப்பும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வின் அரசியலும் அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. 'புதுப்பேட்டை' சமூகத்தில் வன்முறை, அதன் மீதான அச்சம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்பவர்களின் உலகத்தை அங்கு நிகழும் அரசியல் பகடை ஆட்டங்களை ரத்தமும் சதையுமாகத் திரையில் முன்வைத்தது.

படத்தின் நாயகனான கொக்கி குமார் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தாயைக் கொன்றுவிட்ட தந்தையிடமிருந்து தப்பித்துக் கையறுநிலையில் வெளி உலகத்தை எதிர்கொள்கிறான். அதன் பிறகு அரசியல் செல்வாக்கு மிக்க தாதாவிடம் தஞ்சமடைகிறான். அங்கு படிப்படியாக முன்னேறி அரசியல்-தாதா வலைப்பின்னலில் தானும் ஒரு அதிகார மையமாகிறான். எதிரிகளை அழித்து முன்னேறி வருகையில் துரோகங்களால் வீழ்த்தப்படுகிறான். எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களின் பாதுகாப்புக்காக விடுவிக்கப்பட்டு உயர் பதவியையும் பெறுகிறான்.

தமிழில் தாதாக்களின் வாழ்க்கையை, நன்மை தீமைகளைப் புரட்டிப்போடும் விதமாகப் பேசிய திரைப்படம் இதற்கு முன் எதுவுமில்லை. தாதாக்களை உருவாக்கும் காரணிகளைப் பேசிய அதே நேரம் தாதாக்களைத் தூயவர்களாகவோ, அவர்களின் குற்றங்களை நியாயப்படுத்துவதாகவோ ஒரு காட்சியோ, வசனமோ இருக்காது. கொக்கி குமார் நல்லவனா தீயவனா என்பதல்ல. அவன் ஒரு மனிதன். அவனைப் போன்ற பல மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள். அப்படி ஒரு மனிதனைப் பற்றிய அழுத்தமான திரை பிரதிபலிப்பே 'புதுப்பேட்டை'

கொக்கி குமாராக நடித்திருந்த தனுஷ், பாலியல் தொழிலாளி வேடத்தில் துணிச்சலாக நடித்த சிநேகா, கொக்கி குமாரால் மிரட்டப்பட்டு மனைவியாக்கிக் கொள்ளப்படும் சோனியா அகர்வால், குமாருக்கு அடைக்கலம் கொடுத்து அவராலேயே கொல்லப்படும் தாதாவாக பாலாசிங், குமாரைப் பயன்படுத்திக்கொண்டு துரோகம் இழைக்கும் அரசியல்வாதியாக அழகம் பெருமாள், குமாரின் வலதுகரமாக அண்மையில் கரோனாவுக்கு பலியான நிதீஷ் சூர்யா என ஒவ்வொருவரும் மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதம். அனைத்துப் பாடல்களும் வெளியான காலத்தில் மட்டுமல்லாமல் இன்றும் லட்சக் கணக்கான இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் உள்ளன. பின்னணி இசையிலும் அதகளம் செய்திருப்பார் யுவன். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கோலா பாஸ்கரின் படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியில் உயர்தரமான திரைப்படமாகவும் அமைந்திருந்தது 'புதுப்பேட்டை'.

வெளியானபோது வணிகரீதியான வெற்றியைப் பெறத் தவறினாலும் இன்று ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது 'புதுப்பேட்டை'. ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தப் படத்தின் முக்கியத்துவம் மேன்மேலும் உணரப்படும், இன்னும் பல ரசிகர்களை ஈர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்