'ஆனந்தம்' வெளியாகி 20 ஆண்டுகள்: எல்லோருக்கும் பிடித்த அண்ணன் – தம்பிகள்  

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் மனித உறவுகளை பிரதான பேசுபொருளாக வைத்து எடுக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளன. காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. சகோதரர்களுக்கிடையிலான உறவுகளையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் முதன்மைப்படுத்தி ஒரு அழகான குடும்பக் கதையாகப் பரிணமித்து அனைத்து வயது ரசிகர்களுக்கும் பிடித்தமான விஷயங்களை உள்ளடக்கிய திரைக்கதையை அமைத்து மிகப் பெரிய வெற்றியும் காலம் கடந்து ரசிக்கப்படும் தன்மையையும் அடைந்த 'ஆனந்தம்' அப்படிப்பட்ட திரைப்படங்களில் முக்கியமானது. அந்தப் படம் வெளியாகி இன்றோடு இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் என்.லிங்குசாமி இயக்குநராக அறிமுகமான திரைப்படமான 'ஆனந்தம்' 2001 மே 25 அன்று வெளியானது.

இந்தியச் சமூகத்தில் அண்ணன் – தம்பி உறவுக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. அன்பு, பாசம், மரியாதை, அக்கறை, முரண்பாடு, பொறாமை, சொத்துத் தகராறு, திருமணத்துக்குப் பின் நேரும் சிக்கல்கள், அதனால் ஏற்படும் விரிசல் என ஒரே வீட்டில் வசிக்க நேரும் அண்ணன் – தம்பிகளின் உறவுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. இந்தியாவின் இரண்டு பெரும் இதிகாசங்களான ராமாயணத்தில் ராம, லட்சுமண பரத, சத்ருகனர்கள் வாயிலாகவும், ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் வாயிலாகவும் சகோதர உறவின் பரிமாணங்கள் காட்டப்பட்டிருக்கும்.

பாண்டவர்களாகவும் கெளரவர்களாகவும் கிருஷ்ண-பலராமர்களாகவும் இன்னொரு இந்திய இதிகாசமான மகாபாரதத்திலும் சகோதர உறவுக்கு முக்கிய இடம் உண்டு. இதிகாசங்களில் தொடங்கிய இந்த சகோதர உறவுக்கான முக்கியத்துவம் சமகால வெகுஜனக் கலை வடிவங்களான இந்தியத் திரைப்படங்களிலும் பிரதிபலித்ததில் ஆச்சரியமில்லை. தமிழிலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல அண்ணன் – தம்பி படங்கள் வெளியாகியுள்ளன. ஒரே ஒரு அண்ணன் – தம்பி, ஒருவரே அண்ணனாகவும் தம்பியாகவும் நடிக்கும் இரட்டை வேடப் படங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் நான்கைந்து சகோதரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அதிலும் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வது சமூக வழக்கமாகிவிட்ட காலகட்டத்தில் மூன்றுக்கு மேற்பட்ட அண்ணன் – தம்பிகளைக் கொண்ட படங்கள் உறவுகளால் நிரம்பிய வீடுகளின் உன்னதத்தை உணர்த்தியதாலும் பெரிதும் வெற்றி பெற்றன.

அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் 'ஆனந்தம்'. மளிகைக் கடை நடத்தும் குடும்பம். அதிக வயது வித்தியாசம் கொண்ட நான்கு அண்ணன் தம்பிகள், மூத்த மகனே குடும்பத்தில் அனைவரின் மதிப்பையும் பெற்றவர், குடும்பத்தைக் காப்பாற்றுகிறவர், வழிநடத்துபவர். முதல் தம்பி, அண்ணன் இருக்கும்போது குரலை உயர்த்திக்கூடப் பேசாத அளவு அவர் மீது அதீத மரியாதையும் அன்பும் கொண்டவர். அடுத்த இரண்டு தம்பிகளும் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள். அதே நேரம் அண்ணன்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். தங்களுக்குக் கொடுக்கப்படும் செல்லத்தைத் தவறாகப் பயன்படுத்தாதவர்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் ஆண் ரசிகர்கள் தம்முடன் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஒற்றையாகப் பிறந்தவர்கள் இப்படிப்பட்ட அண்ணன், தம்பி நமக்கில்லையே என்று ஏங்கினார்கள். \

அம்மாவுக்கு முதன்மை மரியாதை கொடுத்து அவருக்காக வீட்டு வேலைகளைச் செய்யும் மகன்களையும் மனைவிகளுக்குச் சம மரியாதையும் அன்பும் கொடுப்பவர்களாகவும் கொழுந்தியாள்/அண்ணியைக் கண்டிக்கும் உரிமைகொண்ட அக்காவாக/ கோபித்துக்கொள்ளும் உரிமைகொண்ட தங்கையாகப் பார்க்கும் சகோதரர்களையும் பெண்களுக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன?

உறவுகளுக்கிடையிலான மரியாதையையும் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமல்லாமல் முரண்களையும் பிணக்குகளையும் விரிசல்களையும் காட்சிப்படுத்தியதோடு அவற்றைக் கடந்து குடும்பங்களை நிலைகுலையாமல் வழிநடத்திச் செல்லும் அன்பையும் விட்டுக்கொடுத்தலையும் முன்னிறுத்தியதாலும்தான் 'ஆனந்தம்' முக்கியமான குடும்பத் திரைப்படம் ஆகிறது. காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் ஆகிய அம்சங்களும் படத்தின் மைய அம்சமான குடும்ப உறவுகளை யதார்த்தத்துக்கு நெருக்கமான தன்மையைச் சிதைக்காத வண்ணம் அழகாக இணைக்கப்பட்டிருந்தன.

மூத்த மகனாக மம்மூட்டி, முதல் தம்பியாக முரளி, அன்பும் அக்கறையும் நிறைந்த அம்மாவாக ஸ்ரீவித்யா, அப்பாவித்தனம் மிக்க அப்பாவாக டெல்லி கணேஷ், பொறுப்புள்ள மூத்த மருமகளாக தேவயானி, குடும்பத்தில் தனக்கும் கணவருக்கும் மரியாதை இல்லையே என்னும் ஏக்கத்தைக் கோபமாக வெளிப்படுத்தும் இளைய மருமகளாக ரம்பா, அழகான தம்பியாக அப்பாஸ், அவருக்கேற்ற காதலியாக சிநேகா, வீட்டுக்குத் திருட வந்துவிட்டு குடும்பத்தில் ஒருவரைப் போன்ற வேலையாளாக மாறிப் போகும் பாவா லக்‌ஷ்மணன் என அனைவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தி வெகு சிறப்பாக நடித்திருந்தார்கள். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இன்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தில் வருவதைப் போலவே கும்பகோணத்தில் அண்ணன் – தம்பிகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் குடும்பமும் மளிகைக் கடை தொழிலில் ஈடுபட்டிருந்தது. தன் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்கி அதை அனைவராலும் தொடர்புபடுத்தி ரசிக்கக்கூடிய ஒரு திரைக்கதையாகவும் தரமான திரைப்படமாகவும் அமைத்து முதல் படத்திலேயே ஒரு அசாத்திய திறமை வாய்ந்த திரைப்படைப்பாளியாக தன் வருகையை நிகழ்த்தினார் லிங்குசாமி. இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு 'ரன்', 'சண்டக்கோழி', 'பையா' எனப் பல்வேறு வகைமைகளில் பல ரசிக்கத்தக்க வெற்றித் திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.

இருந்தாலும் 'ஆனந்தம்' லிங்குசாமிக்கும் திரைப்பட அனைத்து வயது ரசிகர்களுக்கும் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படமாக இன்றும் தொடர்கிறது. தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் திரைப்படமாகவும் எப்போது ஒளிபரப்பட்டாலும் குடும்பப் பெண்களையும் ஏன் ஆண்களையும்கூட தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்துவிடச் செய்யும் திரைப்படங்களில் ஒன்றாக 'ஆனந்தம்' திகழ்கிறது. குடும்ப சென்டிமென்ட்டைக் கிண்டலுக்குரியதாகப் பார்க்கத் தொடங்கியிருக்கும் காலகட்டத்திலும் உறவுகளின் உண்மையான பிரதிபலிப்பின் மூலம் குடும்ப அமைப்பின் குறைகளைக் கடந்த மேன்மையை அனைவருக்கும் உணர்த்தியதே 'ஆனந்தம்' காலம் கடந்து ரசிக்கப்படுவதற்கான முதன்மையான காரணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்