கட்டாயத் தேவையின்றி வெளியே செல்லாதீர்கள்: கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கட்டாயத் தேவையின்றி வெளியே செல்லாதீர்கள் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தீவிரம் கடுமையாக உள்ளது. ஒரு நாளைக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த நேற்று (மே 24) முதல் ஒரு வாரத்துக்குத் தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.

மேலும், மக்கள் மத்தியில் கரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த திரையுலக பிரபலங்களும் களமிறங்கியுள்ளனர்.

கரோனா விழிப்புணர்வு தொடர்பாக கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது;

"கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாமே சின்னச்சின்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். கட்டாயத் தேவையின்றி வெளியே செல்லாதீர்கள். செல்லும் போது முகக் கவசம் அணியுங்கள். தேவைப்படும் இடங்களில் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள். சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் சொல்லும் விதிமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.

நான் எனது முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட்டேன். நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் கண்டுப்பாக தடுப்பூசி போடுங்கள். இதைத்தான் நமது தமிழக அரசாங்கமும், சுகாதாரத்துறையும் வலியுறுத்துகின்றனர். இவற்றைப் பின்பற்றி நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.

கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கரோனாவை வெல்வோம் மக்களைக் காப்போம். கரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்"

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE