பாலாபிஷேகம் வேண்டாம்; இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் - சோனு சூட் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தன் படத்துக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோக்கள் வெளியான நிலையில் பாலை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவினார்.

இது இல்லாமல் வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்தார்.

அதே போல அவரது உதவிகள் இந்த ஆண்டும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் கரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சோனு சூட் ரசிகர்கள் சிலர் ஆளுயர சோனு சூட் பேனருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதே போல தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இதில் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் பாலை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE