எதுவும் நிச்சயமில்லை; தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்: ப்ரியா பவானி சங்கர்

By செய்திப்பிரிவு

விஷால் படம் தொடர்பான தனது ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா, பொன்வண்ணன், சம்பத் ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'அடங்க மறு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

'அடங்க மறு' படத்துக்குப் பிறகு, கார்த்திக் தங்கவேலின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவரும் பல்வேறு நாயகர்களிடம் கதைகள் கூறிவந்தார். இறுதியாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க விஷால் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், இன்னும் ஒப்பந்தமாகக் கையெழுத்தாகவில்லை. இது செய்தியாக வெளியானதை முன்வைத்துப் பலரும் சமூக வலைதளத்தில் "இந்தச் செய்தி உண்மையா?" என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ப்ரியா பவானி சங்கர் கூறியிருப்பதாவது:

"உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே. நான், இயக்குநர் கார்த்தி, விஷால் ஆகியோர் எங்களையும் எங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, வைத்திருக்க முயல்கிறோம். உங்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறோம். இயல்பு நிலை திரும்பியதும் படக்குழுவினர் படம் குறித்த தகவல்களைத் தெரிவிப்பார்கள். எனவே இப்போது பாதுகாப்பாக இருங்கள்".

இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் தெரிவித்தார்.

உடனடியாக விஷாலுடன் நடிக்கவுள்ளதை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர் என்று பலரும் செய்திகளை வெளியிட்டார்கள். அந்தச் செய்தி தொடர்பாக ப்ரியா பவானி சங்கர் மீண்டும் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது;

"எதையும் உறுதிசெய்ய நான் சரியான ஆள் கிடையாது மக்களே. இது பற்றி எதையும் விவாதிக்கும் நிலையில் அவர்கள் இல்லை என்று ஒரு நல்ல தோழியாக அவர்களிடம் சொன்னேன், அவ்வளவே. சகஜ நிலை திரும்பி எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது அந்தப் படத்தை ஒரு ரசிகையாகவோ அல்லது அந்தப் படத்தில் நடிக்கும் நடிகையாகவும் அதை ரசிப்பேன். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதுவும் நிச்சயமில்லை. தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்".

இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE