கரோனாவைத் தடுக்க முக்கியமான நான்கு விஷயங்கள்: சத்யராஜ் அறிவுரை

By செய்திப்பிரிவு

கரோனாவைத் தடுக்க முக்கியமான நான்கு விஷயங்கள் என்னென்ன என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தீவிரம் கடுமையாக உள்ளது. ஒரு நாளைக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த இன்று (மே 24) முதல் ஒரு வாரத்துக்குத் தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.

மேலும், மக்கள் மத்தியில் கரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த திரையுலக பிரபலங்களும் களமிறங்கியுள்ளனர்.

கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது;

"மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம். இது ஒரு சோதனையான காலகட்டம். இதிலிருந்து வெளியே வரத் தேவையான விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

கரோனாவைத் தடுக்கத் தேவையான முக்கியமான மூன்று விஷயங்கள் நம் அனைவருக்கும் தெரிந்ததே. முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி. கூடுதலாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம் குடும்பங்களில், நண்பர்கள் வீட்டில் சுப காரியங்கள், துயரச் சம்பவங்கள் என நடக்கின்றன.

நம்மிடம் இருக்கும் பிரச்சினையே, இந்த விழாவுக்குச் செல்லவில்லை என்றால் என்ன நினைப்பார்கள், சம்பந்தி வீட்டில் என்ன பேசுவார்கள், உறவினர்கள் கோபித்துக் கொள்வார்களே, பங்காளிகள் தப்பாக நினைப்பார்களே, ஊர் என்ன பேசும் என்றெல்லாம் யோசிப்போம்.

இதற்கான தீர்வு என்னவென்றால், விழாவுக்கு அழைப்பவர்களே, வரவேண்டாம் என்று சொல்வதுதான். வராமல் இருந்தால்தான் உனக்கும், எங்களுக்கும் நல்லது என்று சொல்ல வேண்டும். போகவில்லையென்றால் தப்பாக நினைப்பார்களோ என்கிற குற்ற உணர்வு வராமல் இருக்க இது உதவும். இன்று இருக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களின் உதவியுடன் இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம்.

நிறைய தடுப்பூசிகள் வர ஆரம்பித்துவிட்டன. கரோனா என்பது இன்னும் சில மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ இல்லாமல் போகும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நாமே கரோனா குறித்து எதுவும் முடிவு செய்யக் கூடாது. முறையான மருத்துவர் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். அது மிக மிக முக்கியம்.

சிறப்பான அரசு அமைந்திருக்கிறது. மக்களுக்காக அற்புதமான களப்பணியை ஆற்றி வருகின்றனர். நாம் அவர்களுடன் கை கோக்க வேண்டிய காலமிது. நம்மையும் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டிய அவசரத்தில், அவசியத்தில் நாம் இருக்கிறோம். கரோனாவை வென்றெடுப்போம். கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். உலகத்துக்கே முன்மாதிரியாக தமிழ்நாடும், தமிழ் மக்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”.

இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE