நாயாட்டு: வேட்டையாடப்படும் காவலர்கள்

By முகமது ஹுசைன்

சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதமும், அப்போது எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை. அத்தகைய அசாதாரணச் சூழ்நிலையைச் சந்திக்கும் காவலர்கள் மூவரின் இன்னல்களும், அவற்றிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளின் ஊடே நீளும் அவர்களுடைய வாழ்க்கையுமே 'நாயாட்டு' மலையாளத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம், அதன் அரசியல் நிலைப்பாட்டுக்காகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பலியாடுகள்

மார்டின் பிரபாகட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் இந்தப் படம், அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான இணக்க விளையாட்டில் பலியாகும் சாமானியர்களின் கையறு நிலையைப் பேசுகிறது. ‘நாயாட்டு’ என்றால் தமிழில் வேட்டை என்று பொருள். காவல்துறையைச் சேர்ந்த மூவர், காவல் துறையினராலேயே வேட்டையாடப்படும் பின்னணியை, மிகுந்த யதார்த்தத்துடன் இந்தப் படம் காட்சிப்படுத்தி உள்ளது.

பெண் காவலரான சுனிதா (நிமிஷா சஜயன்), தன்னைத் தொந்தரவு செய்யும் உறவுக்கார இளைஞனைக் காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அங்கே அந்தப் பிரச்சினைக்குரிய இளைஞனுக்கும், புதிதாகக் காவல்துறையில் சேர்ந்திருக்கும் பிரவீன் (குஞ்சாக்கோ போபன்), அவருடைய மூத்த அதிகாரி மணியன் (ஜோஜு ஜார்ஜ்) ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால், லாக்கப்பில் அடைக்கப்படும் அந்த இளைஞர், அவருடைய அரசியல் செல்வாக்கினால் சில நிமிடங்களில் விடுவிக்கப்படுகிறார்.

இதன் பின்னர் ஏற்படும் எதிர்பாராத விபத்து, இந்த மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அரசியல் அழுத்தம் காரணமாக அவர்கள் மீது கொலை வழக்குப் பதியப்படுகிறது. இரண்டு நாட்களில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அது முடியும்வரை தங்கள் பக்கம் உள்ள உண்மையை விளக்க முடியாது என்று நினைத்து மூவரும் தப்பித்து ஓடுகின்றனர். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.

யதார்த்த மொழி

குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா ஆகியோரின் தேர்ந்த நடிப்பு இந்தப் படத்துக்குத் தேவைப்படும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி மெதுவாக ஆரம்பிக்கும் திரைப்படம், படிப்படியாக வேகமெடுத்து, ஜெட் வேகத்தில் பயணித்து முடிகிறது. படத்தின் விறுவிறுப்புக்கும் அது நம்முள் ஏற்படுத்தும் திகிலுக்கும் பதைபதைப்பான பின்னணி இசையும் (சில இடங்களில் அதன் மவுனமும்), அற்புதமான ஒளிப்பதிவும் கூடுதல் வலுவைச் சேர்த்துள்ளன.

சினிமாத்தனம் சிறிதுமற்ற யதார்த்த மொழி, இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியான ஷாஹி கபீர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால், அரசியல் குறுக்கீடு, அதிகார அத்துமீறல், காவல்துறையின் கையாலாகாத நிலை ஆகியவற்றைத் தத்ரூபமாக விவரித்துள்ளார்.

நகை முரண்

ஒரு சாதாரணக் கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு உண்மைக்கு வெகு அருகிலிருக்கும் விதமாகத் திரைக்கதை அமைப்பதன் மூலம் அதை ஒரு வாழ்வனுபவமாக மாற்றி, அதை அப்படியே பார்வையாளர்களுக்குள் கடத்தும் மாயாஜாலத்தைச் சமீபகாலமாக மலையாளத் திரைப்படங்கள் அதிக அளவில் நிகழ்த்தி வருகின்றன.

'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஈடா', 'மகேஷிண்டே பிரதிகாரம்' என நீளும் அந்தப் பட்டியலின் சமீபத்திய இணைப்பு இந்த ‘நாயாட்டு’. இருப்பினும், தலித்துகளுக்கு எதிராக நாடெங்கும் அநீதிகள் நடக்கும் நம்முடைய நாட்டில், ஓட்டு அரசியலுக்காக அரசும் அதிகாரமும் வளைந்து கொடுப்பதாக இந்தப் படத்தில் விவரித்திருப்பது நகை முரணே.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE