‘இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல’ - ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

‘இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல’ - ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், சில மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.

கரோனா தொற்றின் 2-வது அலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதியானது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணம்பெற வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நாளை (மே.20) தனது பிறந்தநாள் வரவுள்ளதை முன்னிட்டு ஜூனியர் என்.டி.ஆர் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் அன்பு ரசிகர்களுக்கு,

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் குறுஞ்செய்திகள், வீடியோக்கள், அன்பான வாழ்த்துகள் அனைத்தையும் கண்டேன். உங்கள் பிரார்த்தனையே என்னை இயங்க வைக்கிறது. இந்த அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நான் நன்றாக இருக்கிறேன், விரைவில் கரோனாவிலிருந்து குணமடைவேன் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும், என் பிறந்தநாளின் போது என் மீது நீங்கள் காட்டும் அன்பு மதிப்புமிக்கது. ஆனால் இந்த சவாலான காலகட்டத்தில் வீட்டில் இருந்து, ஊரடங்கு விதிகளை பின்பற்றுவதே நீங்கள் எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.

நம் நாடு கரோனாவுடனான போரில் இருக்கிறது.

நம் முன்களப்பணியாளர்களும், மருத்துவ சமூகமும் ஒரு கடுமையான, தன்னலமற்ற போரில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏராளமான மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. நலிந்தவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரம்.

உங்கள் குடும்பத்தையும், அன்புக்குரியவர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள்.

இவை அனைத்தும் முடிந்தபிறகு, கரோனாவுக்கு எதிரான போரில் வென்றபிறகு நாம் ஒன்றுசேர்ந்து கொண்டாடலாம்.

முகக்கவசம் அணியுங்கள், வீட்டில் இருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE