கோவிட் ரசிகர் மன்றங்களைப் புண்படுத்த மாட்டேன்: கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட கங்கணா பதிவு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 தொற்றிலிருந்து தான் மீண்டுவிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மே 8ஆம் தேதி அன்று தான் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து கங்கணா பகிர்ந்திருந்தார். மேலும், "மக்களே, எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியைத் தராதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள், இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை பயமுறுத்தி வருகிறது" என்று கங்கணா குறிப்பிட்டிருந்தார்.

கரோனா தொற்றை சாதாரண காய்ச்சல் என்று சொன்னதால் பலர் கங்கணாவை விமர்சித்தனர். மேலும் இந்தத் தவறான தகவலால் அவரது பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியது. இதன் பிறகு மீண்டும் பதிவிட்ட கங்கணா, "கோவிட்டை அழிப்பேன் என்று நான் அச்சுறுத்திய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. ட்விட்டரில் தீவிரவாதிகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோவிட் ரசிகர் மன்றமா. அற்புதம். நான் இன்ஸ்டாவுக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளன. ஆனால், இங்கு ஒரு வாரம் கூட தாண்ட மாட்டேன் என்று நினைக்கிறேன்" என்று பகிர்ந்தார்.

தற்போது தனக்கு தொற்று நீங்கிவிட்டது என்பதைப் பகிர்ந்திருக்கும் கங்கணா, "இன்று எனக்கு கோவிட் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. இந்தக் கிருமியை நான் எப்படித் தோற்கடித்தேன் என்று சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், கோவிட் ரசிகர் மன்றங்களைப் புண்படுத்த வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆம், இந்தத் தொற்றை அவமதித்தால் அதனால் புண்படுபவர்களும் இங்கே இருக்கின்றனர். எது எப்படியோ, உங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை குறித்த கங்கணாவின் சர்ச்சைக் கருத்தைக் காரணம் காட்டி ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE