கரோனாவிலிருந்த குணமடைந்த வசந்த பாலன்- ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கரோனா 2-வது அலையின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் வசந்தபாலனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தபாலனை அவரது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்த நிகழ்வை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வசந்த பாலன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தான் கரோனாவிலிருந்து பூரண நலமடைந்து வீடு திரும்பியது குறித்தும் அதற்கு காரணமானவர்கள் குறித்து ஒரு நீண்ட பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு பின்வருமாறு:

மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன். ஒரு மாத பூரண ஓய்வுக்கு பிறகு மெல்ல என் பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அபாயக்கட்டத்தைக் கடக்க நட்பின் கரங்களால் பேருதவி செய்த சில உயர்ந்த உள்ளங்களை நினைவு கூறாமல் என் கடமை தீராது

கொரானாத் தொற்று ஏற்பட்ட முதல் தினத்தில் இருந்து எனக்கான மருத்துவ ஆலோசனைகளை சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வழங்கியவண்ணம் இருந்தார்.

ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிறைந்து வழிந்ததால் நானே முடிவெடுத்து வீட்டிலே தனிமைப்படுத்திக்கொண்டதில் காய்ச்சல் குறையவில்லை.

சகல வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தினார். ஆனால் என் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் இல்லம் அருகே உள்ள சின்ன மருத்துவமனையில் சேர்ந்தேன்.

அன்றிரவு எனக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் என் நுரையீரல் மருத்துவமனையில் சேர்ந்த போது ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாகவும் காட்டியது.

நண்பன் வரதன் அந்த சிடி ஸ்கேனை மருத்துவர் சிவராமனுக்கு அனுப்ப அவர் உண்மையில் மிகவும் பதறி. வரதன் மிக அவசரம் ! மிக அவசரம் ! தவற விடும் நொடிகள் மிக ஆபத்தானவை என்று அறிவுறுத்தி எட்டு திசையும் எனக்கான மருத்துவமனைக்கு போராடி, கடைசியில் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மதிப்பிற்குரிய ராதாகிருஷ்ணன் மற்றும் உதயசந்திரன் அவர்களைத் தொடர்புக்கொண்டு அப்போலோவில் தொற்று நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ராமசுப்ரமணியம் அவர்களிடம் உரையாடி என் நிலமையை எடுத்துரைத்து எனக்கான ஒரு படுக்கையை மருத்துவர் கு.சிவராமன் அப்போலோவில் பெற்று விட்டார்.

அதிகாலையிலேயே எனை மருத்துவமனை மாற்றும் முயற்சி பற்றி நண்பர் வரதன் சொன்னான்.

"அப்போலாலாம் நமக்கு சரியா வருமாடா...நாமளலாம் மிடில்கிளாஸ் என்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்துவிடு" என்று கெஞ்சினேன்.

"வாயப்பொத்திக்கிட்டு சும்மாயிரு"

என்றபடி நான் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டேன்.

எனை பரிசோதித்த மருத்துவர் ராமசுப்ரமணியம் 'ஒரு உயிர்காக்கும் மருந்தின் பெயரை உச்சரித்து இந்த மருந்து அது எங்கள் மருத்துவமனையில் இப்போது ஸ்டாக் இல்லை எங்கிருந்தாவது இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் தருவியுங்கள்..ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்று அறிவுறுத்தினார்.

மருத்துவர் சிவராமனின் இடையறாது போராட்டத்தில் உயர்திரு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் அவர்களின் தயவில் அந்த உயிர்காக்கும் மருந்து மருந்துவமனைக்கு ஐந்து மணி நேரத்திலேயே வந்து சேர்ந்தது. என் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்ட 48 மணி நேரம் கழித்து நான் அபாயக் கட்டத்தைக் கடந்தேன்.

வரதன் அழைத்தான். பொழச்சுக்கிட்ட என்றான். தெரியும் என்றேன். இதற்கு முழுக் காரணம். ஓரே பெயர்
அது டாக்டர் கு.சிவராமன் என்று அழுத்தி சொன்னான்.

நன்றி நவிழ்ந்து மருத்துவர் கு. சிவராமன் அவர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினேன். நன்றி என்று சொல்லிவிட்டு

"வரதன் அலைஞ்ச அலைச்சல்கள் இருக்கே பாலன்! நீங்கள் கொடுத்து வைத்தவர் ! இத்தனை ஒரு ஆருயிர் நண்பனைப்பெற என்று வரதனுக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

என்ன வேண்டும் நண்பா உனக்கு எடுத்துக்கொள் என்றால் எழுந்து வாடா ! வேலைகள் கிடக்கிறது என்கிறான். ஆருயிர் நண்பர்களை நீங்கள் ஒருநாளும் தேடமுடியாது. அதுவாக உங்கள் இதயம் தேடி வரும். நான் கொடுத்து வைத்தவன். அப்படியொரு ஒரு இதயத்தின் பக்கத்தில் இருக்கிறேன். திசையெங்கும் உள்ள தெய்வங்களுக்கு நன்றி!

இவ்வாறு வசந்த பாலன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்