கரோனா நிவாரண நிதி: ஷங்கர், வெற்றிமாறன், ஜெயம் ரவி தலா ரூ.10 லட்சம் வழங்கினர்

By செய்திப்பிரிவு

கரோனா நெருக்கடியைச் சமாளிக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பேரிடரின் நோய்த்தொற்று ஒருபுறம், பொருளாதார பாதிப்பு ஒருபுறம் அரசு நிர்வாகத்தை வாட்டி வருகிறது. இதை அடுத்து முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள், வெளிநாடுவாழ் தமிழர்களிடம் தாராளமாக நிதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண கடைநிலை ஊழியர் வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்த நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

வெற்றிமாறன், ஷங்கர், ஜெயம் ரவி என மூவரும் தலா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதுதவிர, ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இவர் திமுகவில் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக உள்ளார்.

இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(c)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE