பெஃப்சி அமைப்புக்கு அஜித் ரூ.10 லட்சம் நிதி: ஆர்.கே.செல்வமணி தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனுக்காக நடிகர் அஜித் குமார் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனை பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி உறுதி செய்துள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாகக் கடந்த வருடம் திரைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. படப்பிடிப்புகளுக்கு அனுமதி நிறுத்தப்பட்டு, பல மாதங்கள் திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அந்த சமயத்தில் பல்வேறு கலைஞர்கள், இப்படி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குக் குறிப்பாக தினக்கூலிப் பணியாளர்களுக்கு அவர்களின் சங்கம் மூலம் உதவி செய்தனர்.

கடந்த வருடம் பெஃப்சி அமைப்புக்கு ரூ.4 கோடி அளவில் நிதியுதவி கிடைத்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட 25,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டது. இயக்குநர்கள் ஜெயேந்திரா, மணிரத்னம் இருவரும் இணைந்து 'நவரசா' என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பல கட்டங்களாகத் திரைத்துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதில் ஏற்கெனவே முதல் கட்டமாக ஆறு மாதங்களுக்கான மளிகைப் பொருட்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் அஜித் குமார், திரைத்துறை பணியாளர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நிதி கொடுத்ததாகக் கூறினார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று கரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை அஜித் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு நன்றி தெரிவித்த ஆர்.கே.செல்வமணி, மற்ற கலைஞர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வந்து, திரைத்துறை தொழிலாளர்களின் நலன் காக்க உதவ வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE