மே 31 வரை திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து: பெஃப்சி அறிவிப்பு

தமிழகத்தில் திரைப்படம், சின்னத்திரை தொடர்பான அத்தனை படப்பிடிப்புகளும் மே 31 வரை ரத்து செய்யப்படுவதாக தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாவது தொற்றுப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதில் திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. மேலும், அனுமதியின்றின் தொடர்ந்து படப்பிடிப்புகள் சட்டவிரோதமாக நடைபெறுவதாக நடிகை சாந்தினி ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பெஃப்சி அனைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, படப்பிடிப்புக்கு அனுமதி கோரிய இரண்டு திரைப்படங்களுக்குத் தாங்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை முதல் 16 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பும் நிறுத்தப்படும் என்றும் கூறினார்.

"திரைத்துறை தொழிலாளர்களின் பாதுகாப்பை மனதில் கொள்ளும் அளவுக்கு தற்போதைய சூழல் நிலவுகிறது. மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை என எந்தப் படப்பிடிப்பும் நடக்காது. பிரபலமான சிலரோடு சேர்த்து இன்னும் சில திரைத்துறை தொழிலாளர்களும் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்துள்ளனர்" என்று ஆர்.கே.செல்வமணி பேசியுள்ளார்.

கடந்த வருடம் பெஃப்சி அமைப்புக்கு ரூ.4 கோடி அளவில் நிதியுதவி கிடைத்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட 25,000 தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டது. இன்னும் தொடர்ந்து பல நட்சத்திரங்கள் அமைப்புக்கு உதவி செய்து வருவதாகவும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

மேலும் மற்ற கலைஞர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வந்து, திரைத்துறை தொழிலாளர்களின் நலன் காக்க உதவ வேண்டும் என்று செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE