படக்குழுவினரைத் திட்டியது ஏன்?-டாம் க்ரூஸ் விளக்கம்

By ஏஎன்ஐ

'மிஷன் இம்பாசிபிள் 7' படப்பிடிப்பில் கோவிட்-19 கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய குழு உறுப்பினர்களைக் கடுமையாகத் திட்டியது குறித்து நடிகர் டாம் க்ரூஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கோவிட் நெருக்கடியால் முதலில் பாதிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'மிஷன் இம்பாசிபிள் 7’. இதில் நாயகனான டாம் க்ரூஸ் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். பல மாதங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டு, பின் படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்த பிறகு லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் ஒரு தனி கிராமத்தையே உருவாக்கி, படப்பிடிப்பு நடந்தது. எனவே டாம் க்ரூஸ் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளை, படப்பிடிப்புத் தளத்தில் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

டாம் க்ரூஸ் படக்குழுவினரின் பாதுகாப்புகாகப் பல லட்சம் டாலர்களை செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது படப்பிடிப்பில் சிலர் விதிகளை மதிக்காமல் நடந்ததால் டாம் க்ரூஸ், அவர்களைக் கடுமையாகச் சாடி ஒலிப்பதிவு ஒன்றை அனுப்பினார். இந்த ஒலிப்பதிவு கடந்த டிசம்பர் மாதம் ஊடகங்களிடம் கசிந்தது.

இதுகுறித்து இப்போது பேசியிருக்கும் டாம் க்ரூஸ், "நான் சொன்னது சொன்னதுதான். அப்போது அதற்காக நிறைய விலை கொடுத்திருந்தோம். ஆனால் ஒட்டுமொத்தக் குழுவை நான் திட்டவில்லை. ஒரு சிலரை மட்டுமே நிற்க வைத்து, மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டுத்தான் திட்டினேன். அப்படி இருந்ததால்தான் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அன்று என் மனதில் பல உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தன. படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்பதே எங்கள் மொத்த குழுவுக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE