கார்கில் போர்க் காட்சிகள்; விஜய் சேதுபதிக்கு பதில் நாக சைதன்யா: ஆமிர் கான் திட்டம்

By செய்திப்பிரிவு

'லால் சிங் சட்டா' திரைப்படத்தில் கார்கில் போர் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கவிருக்கிறார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இது ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார்.

கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, அனுமதி கிடைக்கப்படும் நேரத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக லடாக் பகுதிகளில் போர்க்களக் காட்சிகளைப் படமாக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சமீபத்தில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யப் படக்குழுவைச் சேர்ந்த நான்கு பேர் லடாக் சென்று வந்தனர்.

ஒரு மாதம் இந்தப் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் பயோ -பபுளில் சில வாரங்கள் இருந்துவிட்டு, பின் சூழல் சகஜமாகி அனுமதி கிடைத்தபின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கின்றனர். 'வார்' திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை அமைத்த பர்வேஸ் ஷேக், இந்தப் போர்க்களக் காட்சிகளை அமைக்கவிருக்கிறார்.

மேலும், விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாபாத்திரத்தில் தற்போது நாக சைதன்யா நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. நாயகனின் நெருங்கிய நண்பன் கதாபாத்திரத்தில் அவர் தோன்றவுள்ளார். படப்பிடிப்புத் தேதிகளைச் சரியாக ஒதுக்கமுடியாத காரணத்தால் விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து விலகியது நினைவுகூரத்தக்கது.

கடந்த கிறிஸ்துமஸ் தின வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த 'லால் சிங் சட்டா', 2021 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE