இப்போதைக்குப் படப்பிடிப்பு வேண்டாம்: 'தளபதி 65' குழுவுக்கு விஜய் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பை இப்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என்று படத்தின் நாயகன் விஜய், தயாரிப்புத் தரப்பிடம் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

‘தளபதி 65’ என்கிற தற்காலிகத் தலைப்புடன், நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான மால் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது.

ஆனால், தற்போது கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாகி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. திரைத்துறையில் இருப்பவர்களும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இது தவிர இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் கோவிட்-19 பாதிப்பால் காலமானது திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

எனவே தற்போதைய சூழல் சகஜமாகி, ஊரடங்கு உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெறும் வரை படப்பிடிப்பு வேண்டாம் என்று நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தனது இந்த முடிவைத் தயாரிப்புத் தரப்புக்கும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதால் இன்னும் அவகாசம் இருக்கிறது என்றும், வேண்டுமென்றால் படப்பிடிப்புக்குத் தேவையான தேதிகளைத் தான் மொத்தமாக ஒதுக்கித் தருவதாகவும் விஜய் உறுதி அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் இல்லையென்றாலும், இப்போதைக்கு 'தளபதி 65' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE