இன்ஸ்டாகிராமிலும் கங்கணாவுக்கு வந்த சோதனை: கோவிட் ரசிகர் மன்றம் என்று விமர்சனம்

By செய்திப்பிரிவு

கோவிட்-19 தொற்று குறித்து கங்கணா ரணவத் கூறிய கருத்தையொட்டி அவரது பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. இது குறித்து கங்கணா கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

சனிக்கிழமை காலை தனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக கங்கணா ரணவத் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். மேலும், "இந்த கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வருவது எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன். வாருங்கள் இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை பயமுறுத்திவருகிறது. ஹர ஹர மஹாதேவ்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கோவிட்-19ஐ சிறு காய்ச்சல் என்று தவறாகக் குறிப்பிட்டதால் அவரது இந்தப் பதிவு நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நீக்கத்தைக் கிண்டல் செய்யும் விதமாக, கங்கணா இன்னொரு பதிவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

"கோவிட்டை அழிப்பேன் என்று நான் அச்சுறுத்திய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. ட்விட்டரில் தீவிரவாதிகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோவிட் ரசிகர் மன்றமா. அற்புதம். நான் இன்ஸ்டாவுக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு வாரம் கூட தாண்ட மாட்டேன் என்று நினைக்கிறேன்" என்று கங்கணா இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பிரிவில் கூறியுள்ளார்.

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை குறித்த கங்கணாவின் சர்ச்சைக் கருத்தைக் காரணம் காட்டி ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE