கடினமான ஒரு மாத அனுபவம்: அருண் பாண்டியன் இதய சிகிச்சை குறித்து கீர்த்தி பாண்டியன் பதிவு

By செய்திப்பிரிவு

நடிகர் அருண் பாண்டியனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதற்கு நடந்த சிகிச்சை குறித்தும், அதற்கு முன் வந்த கரோனா தொற்று குறித்தும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் பதிவு செய்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பொழுதுபோக்குத்துறையைச் சேர்ந்தவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அருண் பாண்டியனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறித்தும், தொடர்ந்து அவருக்கு நடந்த இதய சிகிச்சை குறித்தும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் பதிவு செய்துள்ளார்.

"கரோனா இரண்டாவது அலையைச் சுற்றியிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கு நடுவில் ஒரு நாள் இரவு அப்பா லேசான நெஞ்சு வலி, தூங்க முடியவில்லை என்று சொன்னார். அவரை அவசரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்குக் கரோனா தொற்று உறுதியானது.

திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் 7 நாட்களும் அங்கேயே மருத்துவ உதவி கிடைக்கும்படி ஏற்பாடு செய்தோம். அந்த 15 நாட்கள் எங்களை அதிகம் பயமுறுத்தியது. ஏனென்றால் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்குக் கரோனா தொற்று தீவிரமாகப் பரவவில்லை என்று நினைக்கிறேன்.

நெஞ்சு வலிப் பிரச்சினையைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று அப்பா உறுதியாக இருந்தார். கரோனா தொற்று நீங்குவதற்கு காத்திருந்தார். தொற்று இல்லை என்று தெரிந்து 7 நாட்களுக்குப் பிறகு மதுரை மீனாக்‌ஷி மிஷன் மருத்துவமனைக்கு முழு இதய பரிசோதனைச் செய்து கொள்ள அப்பா சென்றார்.

ஆஞ்ஜியோகிராம் சோதனையில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும், அதில் இரண்டு அடைப்புகள் 90 சதவிதம் தீவிரமடைந்ததால் உடனடி சிகிச்சை தேவை என்பதும் தெரிய வந்தது. நாங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.

அவசரத்தின் அடிப்படையில் அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கரோனாவிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்தாலும் அப்பா சிகிச்சை செய்துகொள்ளத் தயாராக, வலிமையுடன் இருந்தார். 2.5 மணி நேர சிகிச்சை முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த தொற்று காலத்தில் கூடுதலாக இந்த விஷயமும் சேர்ந்துகொண்டது எங்களுக்கு அதிக மனச்சோர்வைத் தந்தது. முன்னெச்சரிக்கையாக, நாங்கள் அனைவரும் அப்பாவைச் சுற்றி இருக்க முடியாத சூழல். அவரோடு பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் சமூக விலகலைப் பின்பற்றினோம். மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். கடந்த மாதம் எங்கள் குடும்பத்துக்கு கடினமாக இருந்தது. ஆனால் நேர்மறையாக இருந்ததே எங்களை தொடர்ந்து செலுத்தியது. குறிப்பாக அப்பா. மனரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது.

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். அறிகுறிகள் தென்படும்போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று கீர்த்தி பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

மார்ச் மாதம் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் நடிப்பில் 'அன்பிற்கினியாள்' திரைப்படம் வெளியானது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்