ஷில்பா ஷெட்டியைத் தவிர குடும்பத்தினர் அனைவரையும் பாதித்த கோவிட்-19

By செய்திப்பிரிவு

நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர், மாமனார், மாமியார், அம்மா, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்குத் தொற்று இல்லை என்றும் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவை உலுக்கி வரும் கரோனா இரண்டாவது அலை இம்முறை பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்களையும் அதிகமாகத் தாக்கியுள்ளது. ஆமிர்கான், அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில், அவரைத் தவிர அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஷில்பா ஷெட்டி, ’’கடந்த 10 நாட்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானதாக இருந்தன. என் மாமனார், மாமியார் இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதியானது. தொடர்ந்து சமிஷா, வியான் ராஜ், என் அம்மா, கடைசியாக ராஜ் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகாரபூர்வ வழிமுறையின் படி அனைவரும் வீட்டுத் தனிமையில், அவரவர் அறையில் உள்ளனர். மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி வருகிறோம். வீட்டுப் பணியாளர்கள் இருவருக்கும் கூட தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுளின் அருளால், அனைவரும் தேறி வருகின்றனர்.

எனக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. விதிகளின் படி அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடனடி உதவி செய்த மும்பை மாநகராட்சி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நன்றி.

உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள். தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள், கிருமி நாசினி பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள். கோவிட் தொற்று இருக்கிறதோ, இல்லையோ நீங்கள் மனரீதியில் நேர்மறைச் சிந்தனையோடு இருங்கள்’’ என்று பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE