‘இந்தியன்‘ வெளியாகி 25 வருடங்கள்: வர்மக்கலை ‘ஆசான்‘ ராஜேந்திரன் சிறப்புப் பேட்டி

By செய்திப்பிரிவு

‘இந்தியன்‘ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவானதையொட்டி அந்தப் படத்தில் வர்மக்கலை சண்டைக் காட்சிகளுக்கு வழிகாட்டிய ‘ஆசான்‘ ராஜேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இந்தியன்‘. அப்பா மகன் என கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் கமல்ஹாசனின் நடிப்புக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

சுதந்திரப் போராட்ட வீரராக சேனாபதி என்கிற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் வர்மக்கலை சண்டைக் காட்சிகள் பெரியவர் முதல் சிறியவர் வரை வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான வர்மக்கலையை இந்தப் படத்தில் பயன்படுத்த வழிகாட்டியது ஆசான் ராஜேந்திரன்.

மதுரைச் சேர்ந்த இவர் படக்குழுவினரோடு சேர்ந்து வர்மக்கலை தொடர்பான காட்சிகளை உருவாக்கிய அனுபவத்தை ‘தி இந்து‘ ஆங்கிலம் இணையத்தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார்.

"அந்த காலகட்டத்தில் மிகச் சிலருக்குத் தான் இப்படி ஒரு கலை இருப்பதே தெரியும். ஏ.எம்.ரத்னமின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் அலுவலகத்திலிருந்து, இயக்குநர் ஷங்கர் என்னை சந்திக்க விரும்புவதாகக் கடிதம் வந்தது. ஷங்கரின் உதவி இயக்குநர் ஒருவர் நான் எழுதிய வர்மக்கலை பற்றிய புத்தகத்தை, திருச்சியில் பார்த்து படித்திருக்கிறார். இந்தக் கலையை பெரிய தளத்துக்குக் கொண்டு செல்ல இது எனக்குப் பெரிய வாய்ப்பு என்று உணர்ந்தேன். உடனடியாக எனது பெட்டி படுக்கையுடன் மெட்ராஸுக்குப் புறப்பட்டேன்.

ஷங்கரின் அலுவலகத்தில் அவரது உதவி இயக்குநர் ஒருவரை வைத்து வர்மக் கலை செய்து காட்டினேன். நான் எழுதிய சில புத்தகங்களையும் அவரிடம் கொடுத்தேன். படத்தின் களம் சுவாரசியமாக இருந்தது. வயதான நாயகன் சண்டை போட வேண்டும் என்பதால் அவர் கடுமையாக அடிக்க வேண்டிய தேவை இல்லாதவாறு காட்சிகள் யோசித்தோம். வர்மக்கலையைத் தேர்ந்தெடுத்தோம்.

முன் தயாரிப்பு வேலைகளில் ஷங்கரின் குழு, எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்டவர்களை சில முறை சந்தித்து உரையாடினேன். படப்பிடிப்பு தளத்தில் இந்தக் கலை குறித்துத் தெரிந்து கொள்ள கமல்ஹாசன் மிகவும் ஆர்வமாக இருந்தார். அக்கறையுடன் நான் சொன்னதை பின்பற்றினார். இந்தியன் படம் வெளியான ஒரு வாரத்தில், முதியவர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். பேசும் போதே கண்னீர் விட ஆரம்பித்தார். திரைப்படத்தில் நாங்கள் காட்டிய வர்மக்கலையைப் பார்த்து அவர் பிரமித்துப் போயிருந்தார்

‘இந்தியன்‘, ‘7ஆம் அறிவு‘ உள்ளிட்ட படங்களில் நமது நாட்டி தற்காப்புக் கலைகள் குறித்துப் பேசப்பட்டிருந்தாலும் இன்னும் நிறைய சொல்லலாம். வர்மக்கலையில் இருக்கும் சில நுணுக்கங்களை திரைப்படங்களில் பயன்படுத்தலாம். தமிழர்களின் பெருமை இது. தென் பொதிகை மலைகளில், அகத்திய முனிவரால் கண்டுபிடிக்கப்பட்ட கலை இது.

நோக்கு வர்மம், மெய்தீண்ட கலை உள்ளிட்ட நுணுக்கங்களையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். இப்படியான விஷயங்கள் நமது கலாச்சாரத்தில் இருக்கும் போது எதற்காக துப்பாக்கி, அருவாளை பயன்படுத்த வேண்டும்?" என்றி கேட்கும் ராஜேந்திரன், மஞ்சா வர்ம்மக்கலை என்கிற பெயரில் சென்னை, மதுரை மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்.

அத்தனை தற்காப்புக் கலைகளுக்கும் தாய் வர்மக்கலை தான் என்று கூறும் ராஜேந்திரன் அடுத்த தலைமுறைக்கு இதைக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE