தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி, சங்கத்துக்குத் தனி ஓடிடி: தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு தீர்மானங்கள்

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி, சங்கத்துக்கென்று தனி ஓடிடி தளம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களைத் தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 6) காலை சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் என்.ராமசாமி, துணைத் தலைவர்கள், கெளரவச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் தொடர்பாக தற்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கும், நமது சங்க உறுப்பினரும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு பெற்றதற்கும், தேர்தலில் வெற்றி பெற்ற நமது சங்க உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, அம்பேத்குமார் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கூட்டத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடை தருபவர்களிடம் பணம் பெற்று உதவலாம், அதற்காக நல்ல உள்ளங்களிடம் கேட்டுப் பெறுவோம் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

சங்கத்தின் பொருளாளரான எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் உடனடியாக 10 லட்ச ரூபாயைச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மற்றவர்கள் தரும் பணத்தையும் சேர்த்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர்களின் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்கும், பள்ளிக் கல்வி/ கல்லூரிக் கல்விக் கட்டணத்திற்குச் சங்கத்தின் அறக்கட்டளையிலிருந்து நிதி வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வியாபாரம் ஆகாமல் இருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் திரைப்படங்களை நமது சங்கம் மூலம் தொடங்க இருக்கும் ஓடிடியில் வெளியிட்டு உதவிடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பட நிறுவனங்கள், புதிய படத் தலைப்புகளுக்குச் செயற்குழு ஒப்புதல் வழங்கியதை அடுத்து பல்வேறு ஆக்கபூர்வமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன".

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE