நடிகர் பாண்டு கரோனாவால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத் தம்பி’, 'திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த் கரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE