'த்ரிஷ்யம் 2' இந்தி ரீமேக்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'த்ரிஷ்யம் 2' திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல் வாங்கியுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ’த்ரிஷ்யம்’. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது. சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் 'த்ரிஷ்யம் 2' வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த வரவேற்பால் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது.

தற்போது படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் பனோரமா ஸ்டூடியோஸின் குமார் மங்கத் பதக் பேசுகையில், "த்ரிஷ்யம் 2வின் வெற்றியைத் தொடர்ந்து அந்த கதை (மற்ற மொழிகளிலும்) அதே அளவு அர்ப்பணிப்புடன், உணர்ச்சியுடன் சொல்லப்பட வேண்டும். தயாரிப்பாளர்களாக எங்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

'த்ரிஷ்யம் 2' தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், ''பனோரமா ஸ்டூடியோஸ் த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி. அவர்கள் படத்துக்கு உரிய நியாயத்தை செய்வார்கள் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

"த்ரிஷ்யம் 2 படத்தின் கதை மக்களை சென்ரு சேர்ந்த3து. அதன் இந்தி ரீமேக்கின் மூலம் இன்னும் பெருவாரியான ரசிகர்களுக்கு பனோரமா ஸ்டூடியோஸ் அதை கொண்டு சேர்ப்பார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி" என்று படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE