'பெல் பாட்டம்' ஓடிடி வெளியீடா?- தயாரிப்பாளர்கள் விளக்கம் 

'பெல் பாட்டம்' திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெய்ன்மெண்ட் விளக்கம் அளித்துள்ளது.

1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா நெருக்கடி காரணமாக மே மாத வெளியீடாக தள்ளிப்போனது.

இந்த நிலையில் அக்‌ஷய் குமாரின் முந்தைய படமான 'லக்‌ஷ்மி' நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் 'பெல் பாட்டமும்' அப்படி வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஜனவரி மாதம் முதலே 'பெல் பாட்டம்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்துப் பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

சில நாட்களாக 'பெல் பாட்டம்' ஓடிடி வெளியீடு இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்படி ஒரு யோசனை இருப்பதாகப் படத்தின் இயக்குநர் ரஞ்சித்தும் கூறியிருந்தார்.

தற்போது இதுகுறித்து தயாரிப்புத் தரப்பு அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

"எங்கள் 'பெல் பாட்டம்' திரைப்படத்தின் வெளியீடு குறித்து ஊடகங்களில் வெளியான அத்தனை ஊகங்களையும் நாங்கள் மறுக்கிறோம். பட வெளியீடு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் சரியான நேரத்தில் பூஜா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மட்டுமே வெளியிடும். இதுகுறித்து எங்கள் செய்தித் தொடர்பாளரைத் தாண்டி வேறு யாரும் பேசுவதற்கு உரிமை இல்லை என்பதையும் கூறிக் கொள்கிறோம்.

எப்போதும் போல ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு தந்து, அதிகாரபூர்வமாக நாங்கள் சொல்லாத எந்த விஷயத்தையும் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். பாதுகாப்பாக இருங்கள், முகக் கவசம் அணியுங்கள். எல்லோருக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE