ஓடிடி தளத்தில் வெளியாகிறது சுமோ

By செய்திப்பிரிவு

ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சுமோ' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

'பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' படங்களை இயக்கியவர் ஹோசிமின். நீண்ட ஆண்டுகள் கழித்து மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சுமோ' படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்தன.

கரோனா அச்சுறுத்தலால் பலமுறை வெளியீடு அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா 2-வது அலை அதிகரித்து வரும் சூழலில் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளது 'சுமோ' படக்குழு. இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. எப்போது வெளியீடு உள்ளிட்ட விவரங்களை புதிய ட்ரெய்லருடன் படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு மிர்ச்சி சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE