பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் கரோனா தொற்றால் மரணம்

பிரபல பாலிவுட் மற்றும் இந்தி சின்னத்திரை நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால், கரோனா தொற்றின் காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 52.

கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடையும் நிலையில், தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தினசரி அதிகமாகி வருகிறது. பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

’பேஜ் 3’, ’டான்’, ’ராக்கெட் சிங்’, ’ப்ரேம் ரத்தன் தன் பாயோ’ உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்த்வர் பிக்ரம்ஜீத். தமிழில் 'அஞ்சான்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இது தவிர பல்வேறு தொடர்களிலும், ஸ்பெஷல் ஆப்ஸ் வெப் சீரிஸிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிக்ரம்ஜீத் ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் நடிப்புத் தொழிலுக்கு வந்தார். பிக்ரம்ஜீத்தின் தந்தையும் இந்திய ராணுவ அதிகாரியாக இருந்தவர். 1963ஆம் ஆண்டு கீர்த்தி சக்ரா விருதை வென்றவர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிக்ரம்ஜீத், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தியை முதலில் இயக்குநர் விக்ரம் பட், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். நடிகை ரிச்சா சட்டா, நடிகர்கள் நீல் நிதின் முகேஷ், ரோஹித் போஸ், குல்ஷன் தேவைய்யா, இயக்குநர் அஷோக் பண்டிட், இசைக் கலைஞர் விஷால் தத்லானி உள்ளிட்ட பல பாலிவுட் கலைஞர்கள் பிக்ரம்ஜீத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் மதுர் பண்டர்கரின் படங்களில் அடுத்தடுத்து நடித்த பிக்ரம்ஜீத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பண்டர்கர், சியாச்சின் ராணுவ செயல்பாடு குறித்த படமே பிக்ரம்ஜீத்தின் கனவுப் படமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE