தேர்தல் அரசியலின் பின்னணியில் காதல் கதை: கே.வி.ஆனந்தின் கடைசி முயற்சி குறித்து கபிலன் வைரமுத்து பகிர்வு

By செய்திப்பிரிவு

தேர்தல் அரசியலின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையை அடுத்த படமாக எடுக்க இயக்குநர் கே.வி.ஆனந்த் முடிவெடுத்திருந்ததாக பாடலாசிரியரும், கதாசிரியருமான கபிலன் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

இன்று (ஏப். 30) அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்த், 'அயன்', 'கோ', 'மாற்றான்', 'காப்பான்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

அடுத்ததாகத் தேர்தல் அரசியலை மையமாக வைத்து ஒரு காதல் கதையை இயக்க அவர் முடிவு செய்திருந்ததாகவும், இதில் நடிக்க சிலம்பரசனிடம் பேசி வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து கபிலன் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

'அனேகன்', 'கவண்', 'காப்பான்' உள்ளிட்ட படங்களில் கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 'கவண்' படத்துக்கான திரைக்கதை வசனத்திலும் பங்காற்றியுள்ளார்.

கே.வி.ஆனந்த் மறைவு குறித்து கபிலன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

"இன்று அதிகாலை இயக்குநர் கே.வி.ஆனந்தின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து மனம் உடைந்திருக்கும். அவரது எத்தனையோ ரசிகர்களில் நானும் ஒருவன். அவரோடு பாடலாசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

அவரோடு பயணித்த ஒவ்வொரு நாளும் ஒரு கல்வி நாளாகவே இருந்தது. ஒரு கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்குள் அவர் நிகழ்த்தும் தேடல் அபாரமானது. உண்மையானது. திரைக்கதை உருவாக்கத்தில் அவர் செலுத்திய உழைப்பு இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு இன்றியமையாத பாடம். கடந்த ஓராண்டு காலமாக விவாதித்து, ‘தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை’ எழுதியிருந்தோம்.

'கோ', 'கவண்' போன்ற படங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் போல இந்தப் படமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக அவர் நம்பினார். பட உருவாக்கத்திற்காக அவர் தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் இந்தப் பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது.

ஒரு சிறந்த இயக்குநரை - ஒப்பற்ற சிந்தனையாளரை - ஒப்பனையற்ற மனிதரை இழந்துவிட்டோம். அவருடைய திரைப்படங்களால் அவர் நம்மோடு வாழ்ந்திருப்பார். என்னைப் பொறுத்தவரையில் அவர் இறக்கவில்லை. எனக்குள் ஒரு புன்னகையாகவே புதைந்திருக்கிறார்" .

இவ்வாறு கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE